gujarat vs delhi
gujarat vs delhi pt web
கிரிக்கெட்

WPL 2024 | ‘நம்ம Power அந்த ரகம்’ குஜராத்தை துவம்சம் செய்த ஷபாலி.. ஃபைனலுக்கு முன்னேறியது டெல்லி!

Angeshwar G

மகளிர் பிரீமியர் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் நேற்று மோதின. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

குஜராத் அணியில் தொடக்கமே சரிந்தது. தென்னாப்ரிக்காவைச் சேர்ந்த லாரா, குஜராத் அணியின் கேப்டனும் விக்கெட் கீப்பருமான பெத் மூனி முறையே 7, 0 ரன்களுக்கு வெளியேறினர். பின் வந்த ஹேமலதாவும் 4 ரன்களில் வெளியேற மிடில் ஆர்டர் சற்றே நிலைத்து நின்று ஆடியது. அதிகபட்சமாக பாரதி 36 பந்துகளில் 42 ரன்களை எடுத்தார். இறுதியில் குஜராத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 126 ரன்களை எடுத்தது. சிறப்பாக பந்துவீசிய குஜராத் அணியின் மரிசான் காப் (Marizanne Kapp), ஷிகா பாண்டே, மின்னு மணி தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

127 என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில் கேப்டன் மெக் லானிங் 18 ரன்களில் வெளியேறினாலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஷெபாலி வர்மா ஒட்டுக்மொத்த ஆட்டத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்தார். பந்துகளை நாலாப்புறமும் சிதறடித்த அவர் 37 பந்துகளில் 71 ரன்களை குவித்தார். இதில் 5 சிக்ஸர்களும், 7 பவுண்டரிகளும் அடக்கம். இவருடன் கைகோர்த்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 28 பந்துகளில் 38 ரன்களை குவிக்க டெல்லி அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பைனலுக்கும் தகுதி பெற்றது.

நாளை டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் நடக்கும் எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. நடப்பு சாம்பியனான மும்பை அணி மீண்டும் பைனலுக்கு முன்னேறும் முனைப்புடன் இருக்கிறது.

மும்பை அணியுடனான லீக் போட்டியில் பெங்களூர் அணியின் எல்லீஸ் பெர்ரி 4 ஓவர்களில் 15 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்களைக் கைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.