deeban lingesh hat trick on first 3 balls of innings web
கிரிக்கெட்

TNPL பிளே ஆஃப்| முதல் 3 பந்தில் 3 விக்கெட்.. 5 பேர் கோல்டன் டக்! 6/5 என தடுமாறிய அணி.!

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் குவாலிஃபையர் 2 போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியில் 5 வீரர்கள் கோல்டன் டக்கில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர்.

Rishan Vengai

தமிழ்நாடு பிரீமியர் லீக் 2026 தொடரின் குவாலிஃபையர் 2 போட்டியில் விடா கோவை கிங்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. கோவை 183 ரன்கள் குவித்த நிலையில், தீபன் லிங்கேஷ் முதல் ஓவரில் ஹாட்ரிக் எடுக்க, 5 பேரை கோல்டன் டக்கில் அவுட்டாகினர். 6/5 என சரிந்த திருச்சி, கேப்டன் ஜெயராம் சுரேஷின் போராட்டத்தையும் மீறி 99 ரன்களில் சுருண்டது.

2026 தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரானது பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்ற தொடரில் சிறப்பாக செயல்பட்ட மதுரை பந்தர்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், விடா கோவை கிங்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் முதலிய 4 அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றன.

திருச்சி - மதுரை அணிகள் மோதிய குவாலிஃபையர் 1 மற்றும் திருப்பூர் - கோவை அணிகள் மோதிய எலிமினேட்டர் போட்டிகள் மழையால் ரத்தான நிலையில் புள்ளிப்பட்டியல் அடிப்படையில் மதுரை பந்தர்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று அசத்தியது. அதேபோல விடா கோவை அணி குவாலிஃபையர் 2 போட்டிக்கு தகுதிபெற்றது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற குவாலிஃபையர் 2 போட்டியில் கோவை மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதிய போட்டி பரபரப்பாக நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த கோவை அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய திருச்சி அணிக்கு கோவை அணியின் தீபன் லிங்கேஷ் முதல் ஓவரிலேயே அதிர்ச்சி கொடுத்தார். முதல் 3 பந்திலும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹாட்ரிக்கை அள்ளிய தீபன் மிரட்டிவிட்டார். டாப் 6 வீரர்களில் 4 பேர் கோல்டன் டக்கிலும், 1 ரன்னிலும் அவுட்டாகி அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்தனர்.

6 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திருச்சி தடுமாறிய நிலையில், கேப்டன் ஜெயராம் சுரேஷ் மட்டும் 9 பவுண்டரிகளுடன் 27 பந்தில் 48 ரன்கள் அடித்து தனியாளாக போராடினார். ஆனால் அவரும் அவுட்டாகி வெளியேற 5 பேரை கோல்டன் டக்கில் பலிகொடுத்த திருச்சி அணி 99 ரன்கள் அடித்து சுருண்டது. இதன்மூலம் 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற கோவை அணி மதுரை பந்தர்ஸ் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் நாளை மோதுகிறது.

இரண்டு அணிகளுக்கும் இடையேயான இறுதிப்போட்டி நாளை இரவு 7.30 மணிக்கு சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்கவிருக்கிறது.