DK - Hazlewood
DK - Hazlewood Twitter
கிரிக்கெட்

"காலங்காலமாக RCB அணிக்கு இருக்கும் கவலை, இந்தமுறை அதிகமாக இருக்கிறதோ என தோன்றுகிறது" - டிவில்லியர்ஸ்

Rishan Vengai

2024 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. ஒரு மெகா ஏலத்திற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் அவர்களுடைய தக்கவைக்கும் மற்றும் வெளியிடும் வீரர்களின் பட்டியலை அறிவித்தன. அப்போது அணிக்கு சிறப்பாக விளையாடி வெற்றிகளை தேடித்தந்த ஹசல்வுட், ஹர்சல் பட்டேல், ஹசரங்கா போன்ற வீரர்களை RCB வெளியிட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ஹசல்வுட்

இம்மூன்று வீரர்களின் வெளியேற்றத்திற்கு பிறகு, ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எப்போதும் இருக்கும் பிரச்சனையான ஆல்ரவுண்டர்கள் மற்றும் வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாமை இம்முறை மேலும் அதிகமாகிவிட்டதோ என ரசிகர்கள் கவலையுடன் இருக்கின்றனர். விராட் கோலி ஆர்சிபி அணிக்காக 17வது ஐபிஎல் சீசனில் பங்கேற்க உள்ளார். இம்முறையாவது அவரின் ஐபிஎல் கோப்பை கனவு நிறைவேறுமா என்ற எதிர்ப்பார்ப்புடன் ஆர்சிபி ரசிகர்கள் இருக்கின்றனர்.

virat kohli

பல வருடங்களாக தொடரும் ஆர்சிபி அணிக்கான சிக்கல் குறித்து பேசியிருக்கும் முன்னாள் ஆர்சிபி வீரர் ஏபிடி வில்லியர்ஸ், ஹசல்வுட் வெளியேற்றம் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார்.

எனக்கு இருக்கும் கவலை இதுமட்டும் தான்! - டிவில்லியர்ஸ் கவலை

ஆர்சிபி அணியின் பலவீனம் குறித்து பேசியிருக்கும் டிவில்லியர்ஸ், ” RCB-ன் பந்துவீச்சானது பல ஆண்டுகளாக பலவீனமாக இருப்பது அனைவரும் அறிந்த உண்மை. பேட்டர்களும் சில நேரங்களில் மோசமாக செயல்பட்டுள்ளனர். ஆனால் நீங்கள் ஒரு அணியாக சேர்ந்து விளையாட வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து ஒருவருக்கொருவர் புரிந்து செயல்பட வேண்டும். கடந்த காலங்களை நீங்கள் எடுத்துப்பார்த்தால், முக்கியமான போட்டிகளில் சுலபமான தவறுகளைச் செய்வது, ஒழுங்காத ஆடாதது மற்றும் அழுத்தத்தின் போது அடிப்படை விசயங்களை கூட சரியாகச் செய்யாதது போன்ற உணர்வுகள் தான் தற்போதும் உள்ளன” என்று டி வில்லியர்ஸ் தனது யூடியூப் சேனலில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

RCB

மேலும் சின்னசாமி ஸ்டேடியத்தில் பந்துவீசுவது எவ்வளவு கடினமான விசயம் என்பது குறித்து பேசியிருக்கும் அவர், "ஆர்சிபி அணியின் பந்துவீச்சு தான் கவலைப்பட வேண்டிய பகுதி. வெளிப்படையாக உங்களுக்கு முகமது சிராஜ், ரீஸ் டாப்லி மற்றும் சில அனுபவ வீரர்கள் உள்ளன. ஆனால் நீங்கள் வெளியிடப்பட்ட வீரர்கள் பெயர்களை பார்த்தால், அவர்கள் வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல் மற்றும் ஜோஷ் ஹசல்வுட் ஆகியோரை வெளியிட்டுள்ளீர்கள். அந்த மூவரும் கடந்த இரண்டு சீசன்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக ஹசல்வுட் நிறைய போட்டிகளை வென்றுள்ளார். அவர் தான் ஆர்சிபி அணியில் இருந்த பந்துவீச்சு கவலையை கட்டுப்படுத்தும் ஒரு வீரராக இருந்தார். தினேஷ் கார்த்திக்கை தக்கவைத்து, ஹசல்வுட்டை வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது ” என்று மேலும் கூறியுள்ளார்.