டி வில்லியர்ஸ்
டி வில்லியர்ஸ் PT
கிரிக்கெட்

“கடைசி 2 வருடங்கள் கண் பார்வை குறைபாடுடன்தான் விளையாடினேன்”- அதிர்ச்சி தகவலை பகிர்ந்த டி வில்லியர்ஸ்

Rishan Vengai

நினைத்த நேரத்தில் மைதானத்தின் எந்த இடத்துக்கும் பந்தை அடிக்கக்கூடிய வீரராக திகழ்ந்த ஏபிடி வில்லியர்ஸ், 360 டிகிரி பேட்டர் என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். நவீன சகாப்தத்தின் தலைசிறந்த பேட்டர்களில் ஒருவராக பார்க்கப்படும் இவர், ஆடுகளத்தில் தனது புத்திசாலித்தனமான ஸ்ட்ரோக்பிளே திறமையால் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தக்கூடியவர். போட்டியை எந்த நேரத்திலும் மாற்றக்கூடியவர் என்பதால் இவருடைய பேட்டிங்கை பார்ப்பதற்கென்றே தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

AB DE Villiers

தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனான டிவில்லியர்ஸ், யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம், தனது 34 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார். அவர் ஓய்வை அறிவித்த போது 2019 உலகக்கோப்பை தொடங்குவதற்கு சில மாதங்களே மீதம் இருந்தன. அப்படிப்பட்ட சூழலில் ஏன் டிவில்லியர்ஸ் அப்படி செய்தார்? நிச்சயம் அவர் 2019 உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்காவை முன்னின்று வழிநடத்தியிருக்க வேண்டும் என்ற ஆதங்கம் ஒவ்வொரு டிவில்லியர்ஸ் ரசிகருக்கும் இப்போதும் உண்டு. அவர் இல்லாமல் சென்ற தென்னாப்பிரிக்க அணி அரையிறுதிக்கு தகுதிபெறாமல் வெளியேறியது.

இந்நிலையில் 2019 உலகக்கோப்பை ஆடாமல் போனது பற்றியும், விரைவாகவே ஓய்வை அறிவித்தது பற்றியும் பேசியிருக்கும் ஏபிடி வில்லியர்ஸ், ஒரு அதிர்ச்சிக்குரிய தகவலை வெளிப்படுத்தி ரசிகர்களை ஷாக்கில் ஆழ்த்தியிருக்கிறார்.

இந்த கண் பார்வையை வைத்துக்கொண்டு எப்படி விளையாடினீர்கள்?

விஸ்டன் கிரிக்கெட் உடன் பேசியிருக்கும் டிவில்லியர்ஸ், “ என் மகன் தற்செயலாக என் கண்ணில் உதைத்ததால் காயம் ஏற்பட்டது. அதன்பின் நான் உண்மையில் என்னுடைய வலது கண்ணில் பார்வையை இழக்க ஆரம்பித்தேன். என்னுடைய ஓய்விற்கு முந்தைய கடைசி 2 வருடங்கள் பாதிக்கப்பட்ட கண்களோடுதான் கிரிக்கெட் விளையாடினேன். எனக்கு அறுவை சிகிச்சை செய்தபோது, ​​மருத்துவர் என்னிடம், ‘இந்த நிலைமையில் எப்படி உங்களால் கிரிக்கெட் விளையாட முடிந்தது?’ என்று கேட்டார். ஆனால் நல்வாய்ப்பாக எனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி இரண்டு வருடங்களில் எனது இடது கண் எனக்கு பக்கபலமாக இருந்தது. அது சிறப்பாக வேலை செய்தது” என்று கூறியுள்ளார்.

ab de villiers

2015 உலகக்கோப்பை தோல்வியும், கோவிட் தொற்று காலமும் ஓய்வை அறிவிக்க பெரிய காரணங்களாக இருந்ததாக தெரிவித்திருக்கும் டிவில்லியர்ஸ், “ஓய்வை அறிவித்ததில் கோவிட் நிச்சயமாக ஒரு பங்கைக் கொண்டிருந்தது, அதில் எந்த சந்தேகமும் இல்லை. அதேபோல் என்னுடைய கிரிக்கெட் பயணத்தில், 2015 உலகக் கோப்பை தோல்வியும் பெரிய காயத்தை காயப்படுத்தியது. அதைக் கடக்க எனக்கு சிறிது நேரம் பிடித்தது. பின்னர் நான் கிரிக்கெட் மீது கவனத்தை செலுத்த ஆரம்பிக்கும் நேரத்தில், தென்னாப்பிரிக்க அணியில் உலகக்கோப்பையை வெல்வதற்கான கலாசாரத்தை நான் உணரவில்லை. அப்போது யாரிடமும் சரியான புரிதல் இல்லாமல் இருந்தது.

de villiers

பின்னர் நான் அடிக்கடி, ‘நாம் ஓய்வை அறிவிக்க இது சரியான நேரமா? இல்லையா?’ என நினைத்துக்கொண்டேன். உண்மையில் ஐபிஎல் அல்லது வேறு எந்த விளையாட்டையும் நான் விளையாட விரும்பவில்லை. 2018ஆம் ஆண்டு எல்லாவற்றிலிருந்தும் விலகி, டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்தினேன். இந்தியாவையும் ஆஸ்திரேலியாவையும் இங்கே தோற்கடிக்கும் முயற்சியை மேற்கொள்ள முடிவு செய்தேன். அதன்பின்னர்தான் நான் என்னுடைய ஓய்வை அறிவித்தேன். அப்போது என் மீது எந்த கவனத்தையும் நான் பெற விரும்பவில்லை, எனக்கு ஒன்றே ஒன்றுதான் சொல்லத்தோன்றியது. அது, ‘எனக்கு ஒரு நல்ல பயணம் கிடைத்தது, மிக்க நன்றி’ என்பது” என்று கூறியுள்ளார்.