டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்திலிருந்து விராட் கோலி ஓய்வை அறிவித்திருப்பது பல உலக கிரிக்கெட் வீரர்களுக்கும் அதிர்ச்சியையே ஏற்படுத்தியுள்ளது. 36 வயதாகும் விராட் கோலி இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகாலம் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியிருக்கலாம் என்பதே எல்லோருடைய ஆதங்கமாகவும் இருந்துவருகிறது.
விராட் கோலி இந்தியாவுக்காக மொத்தம் 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 46.85 சராசரியுடன் 9,230 ரன்கள் எடுத்துள்ளார், இதில் 30 சதங்கள் மற்றும் 7 இரட்டைச் சதங்களும் அடங்கும். அதிகபட்ச ஸ்கோர் 254 ஆகும்.
விராட் கோலி ஓய்வு பெற்றபிறகு பல்வேறு முன்னாள் வீரர்கள் தங்களுடைய வாழ்த்தை தெரிவித்துவரும் நிலையில், முன்னாள் ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர் தன்னுடைய விருப்பத்தை பகிர்ந்துள்ளார்.
விராட் கோலி உடன் சேர்ந்து விளையாட வேண்டுமென்ற ஆசை குறித்து பேசியிருக்கும் டேவிட் வார்னர், “டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்திற்கு விராட் கோலி ஒரு சிறந்த தூதராக இருந்தார், ஏனென்றால் அவர் நீங்கள் பார்த்ததிலேயே கடினமாக உழைக்கும் வீரர்களில் ஒருவர். நாங்கள் இருவரும் எதிரெதிர் அணிகளில் விளையாடியிருந்தாலும், நான் எப்போதும் அவருடைய அணுகுமுறை மற்றும் தன்னம்பிக்கை போன்ற பண்புகளை அதிகமாக மதிக்கிறேன்.
உண்மையில், நீங்கள் என்னைக் கேட்டால், நான் ஒரு முறையாவது விராட்டுடன் சேர்ந்து ஒரே அணியில் விளையாட விரும்பினேன், அப்படி நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவருடைய முழுமையான ஆற்றல் மற்றும் அதீத ஆர்வத்தை நான் களத்தில் பங்கெடுக்க விரும்பினேன், இது ஒரு வீரராக எனது நிறைவேறாத ஆசைகளில் ஒன்றாகவே இருக்கும்” என்று டேவிட் வார்னர் பேசியுள்ளார்.
இதற்கு முன்னர் விராட் கோலியின் ஓய்வு குறித்து பேசியிருந்த டேவிட் வார்னர், “அவர் கிரிக்கெட் விளையாட்டின் ஜாம்பவான். நாங்கள் இளமையாக இருந்தபோது ஒருவருக்கொருவர் எதிராக விளையாடிய முதல் ஆட்டத்தை ஒருபோதும் மறக்க மாட்டேன். அப்போது பார்த்தபோதே ’இவர் ஒரு தீவிர போட்டியாளர், சிறந்தவராக இருப்பார், அனைவரும் போற்றும் ஒருவராக மாறுவார்’ என்றெல்லாம் நினைத்தேன்.
இந்தியாவுக்காக விளையாடி தேசத்தை தோள்களில் சுமந்த சில சிறந்த வீரர்களின் இடத்தை அவர் நிரப்ப வேண்டியிருந்தது. அவர் அதை ஏமாற்றவில்லை. நீங்கள் நீங்களாகவே இருப்பதற்கு நன்றி விராட் கோலி. போட்டியில் நீங்கள் எடுத்துவந்த எனர்ஜி, உங்களுக்கு எதிராகப் போட்டியிட்ட எங்களையும் எங்களுடைய சிறந்ததை வெளிக்கொண்டுவர உதவியது. டெஸ்ட்டிலிருந்து விலகி உங்கள் குடும்பத்துடன் நேரத்தை அனுபவியுங்கள். நன்றி விராட் கோலி!” என்று கூறியுள்ளார்.