டேவிட் வார்னர்
டேவிட் வார்னர் PT
கிரிக்கெட்

"நம்மால் முடிந்த உதவியை செய்ய ஒன்றுபடுவோம்!" - சென்னை மக்களுக்காக ஆஸி. வீரர் வார்னர் பதிவு

Rishan Vengai

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயலால் கடந்த 2 நாட்களாக வேகமான காற்றுடன் கூடிய அதிக கனமழை தொடர்ச்சியாக பதிவானது. 47 ஆண்டுகளில் இல்லாத வகையில் விடிவிடிய வெளுத்து வாங்கிய கனமழையால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் மொத்தமும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. புயலுக்கு இதுவரை 8 உயிர்கள் பலியாகியுள்ளனர். பல மக்கள் இன்னும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கிக்கொண்டு தவித்து வருகின்றனர். அரசு மீட்பு நடவடிக்கையில் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது.

michaung cyclone

இந்நிலையில் மிக்ஜாம் புயலால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்திருக்கும் சென்னை மக்களின் துயர்நிலைக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வருத்தம் தெரிவித்து இன்ஸ்டாகிராமில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருடனும் என் எண்ணங்கள் உள்ளன! - டேவிட் வார்னர்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுடன் இருப்பதாக பதிவிட்டிருக்கும் டேவிட் வார்னர், “சென்னையின் பல பகுதிகளை வெள்ளம் பாதித்திருப்பதை பார்த்து நான் ஆழ்ந்த கவலையடைகிறேன். இந்த இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைவருடனும் என் எண்ணங்கள் இருக்கின்றன. ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருப்பது மிகவும் முக்கியமான ஒன்று. தேவைப்பட்டால் அனைவரும் உயரமான நிலத்தைத் தேடுங்கள்” என்று இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

மேலும் எல்லொரும் உதவும் மனப்பான்மையுடன் இருக்க வேண்டும் என பேசியிருக்கும் அவர், “நீங்கள் உதவக்கூடிய நிலையில் இருந்தால், நிவாரண முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதையோ அல்லது தேவைப்படுபவர்களுக்கு உதவிகளை வழங்குவதையோ உறுதிப்படுத்துங்கள். உதவி தேவைப்படுவோருக்கும், உதவி வழங்குவோருக்கும் நம்மால் முடிந்த ஆதரவை அளிக்க ஒன்றுபடுவோம்” என்று கூறியுள்ளார்.