ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் தன்னுடைய 50வது சர்வதேச சதத்தை பதிவுசெய்த இந்திய வீரர் ரோகித் சர்மா, 38 வயதில் ஐசிசி தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்து உலகசாதனை படைத்தார்..
ஐசிசி தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்த அதிக வயது வீரர் என்ற ரோகித் சர்மாவின் சாதனையானது 22 நாட்களிலேயே முடிவுக்கு வந்துள்ளது..
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அற்புதமான சதமடித்த நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் டேரில் மிட்செல் 46 ஆண்டுகால வரலாற்றில் முதல் நியூசிலாந்து வீரராக சாதனை பக்கத்தில் தடம்பதித்தார்..
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடிவருகிறது..
5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என நியூசிலாந்து கைப்பற்றிய நிலையில், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்துவருகிறது.. கிறிஸ்ட்சர்ச்சில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் 119 ரன்கள் குவித்த டேரில் மிட்செல் நியூசிலாந்தை வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.. 12 பவுண்டரிகள், 2 சிக்சர்களும் இதில் அடங்கும்..
தொடர்ந்து சிறந்த ஃபார்மில் இருந்துவரும் டேரில் மிட்செல் ஐசிசி ODI தரவரிசைப்பட்டியலில் முதலிடம் பிடித்து ரோகித் சர்மாவை பின்னுக்கு தள்ளியுள்ளார்.. கடைசியாக 1979-ம் ஆண்டுதான் நியூசிலாந்து வீரர் க்ளென் டர்னர் ஐசிசியின் ODI தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்திருந்தார்.. அவருக்கு பிறகு நாதன் ஆஸ்டில், ராஸ் டெய்லர் மற்றும் கேன் வில்லியம்சன் போன்ற வீரர்கள் தரவரிசையில் 3வது இடம்வரை முன்னேறியிருந்தனர்..
இந்தசூழலில் 46 ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசியின் ODI தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடிக்கும் முதல் நியூசிலாந்து வீரராக சாதனை படைத்து அசத்தியுள்ளார் டேரில் மிட்செல்..
2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடர் முழுவதும் மிடில் ஆர்டர் வீரராக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய நியூசிலாந்தின் டேரில் மிட்செல்லை, 2024 ஆக்சனில் 14 கோடிக்கு விலைக்கு வாங்கியது சிஎஸ்கே.. அணியின் நீண்டகால மிடில் ஆர்டர் வீரராக பார்க்கப்பட்ட மிட்செல்லை, ஒரு ஆண்டுக்கு பிறகு வெளியேற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி..
சிஎஸ்கே எதிர்ப்பார்த்த பேட்டிங் திறமையை அவரால் வெளிக்கொண்டுவர முடியவில்லை என்பது அதற்கு காரணமாக சொல்லப்பட்டாலும், அணியில் அவர் பேட்டிங் ஆர்டர் மாற்றி இறக்கப்பட்டதும் ஒரு காரணமாக அமைந்தது.. இந்தசூழலில் தன்னுடைய பேட்டிங் திறமையை மீண்டும் வெளிப்படுத்திவரும் மிட்செல், நியூசிலாந்து அணிக்காக மிடில் ஆர்டரில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஜொலித்து வருகிறார்..
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 5ல் 3 இன்னிங்ஸில் களமிறங்கியிருக்கும் மிட்செல் 174.46 ஸ்ட்ரைக் ரேட்டுடனும், 41 சராசரியிலும் ஆடி 82 ரன்களை எடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸை தோற்கடித்திருக்கும் நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வென்று அசத்தியுள்ளது..