சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த பிறகு, ஆஸ்திரேலியாவிற்கு சென்ற இந்திய அணி பார்டர் கவாஸ்கர் தொடரிலும் தோற்று WTC இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை பறிகொடுத்தது.
இரண்டு அடுத்தடுத்த தோல்விகளுக்கு பிறகு இங்கிலாந்துக்கு சென்றிருக்கும் இந்திய அணி வெற்றிப்பாதைக்கு திரும்ப முடியாமல் போராடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 சதங்களை அடித்தபோதும் தோற்றது ஏமாற்றத்தை கொடுத்தது.
இந்த சூழலில் 2வது டெஸ்ட் போட்டியில் வலுவான பிளேயிங் 11 உடன் களமிறங்கும் என நினைத்தபோது, தலைசிறந்த பவுலரான பும்ராவை பெஞ்சில் அமரவைத்துவிட்டு ஆகாஷ் தீப் உடன் களம்கண்டுள்ளது இந்திய அணி.
இதனை முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விமர்சித்திருந்த நிலையில், முன்னாள் தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் பவுலரான டேல் ஸ்டெய்னும் விமர்சித்துள்ளார்.
உலகின் நம்பர் 1 பவுலராக வலம்வரும் பும்ராவை பெஞ்சில் அமரவைத்திருப்பது குறித்து பதிவிட்டிருக்கும் டேல் ஸ்டெய்ன், பும்ராவை ரொனால்டோ உடன் ஒப்பிட்டு இந்தியாவை விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர், “போர்ச்சுகல் அணியில் உலகத்திலேயே தலைசிறந்த ஸ்ட்ரைக்கர் ரொனால்டோ தான். ஆனால் அவர்கள் அவரையே அணியில் விளையாடாமல் இருக்க முடிவு செய்தனர். இது பைத்தியக்காரத்தனம். அதேபோல இந்தியாவும் பும்ராவை அணியில் வைத்துகொண்டே விளையாடாமல் இருக்க முடிவு செய்தனர். ம்ம்ம்... கொஞ்சம் பொறுங்க, ஓ, இல்ல, என்ன! எனக்கு குழப்பமா இருக்கு” என்று பேசியுள்ளார்.