csk vs gt cricinfo
கிரிக்கெட்

CSK-க்கு 230 ரன்கள் இலக்கு.. 0 ரன்னில் சாம்சன் OUT.. இழுத்து மூடப்பட்ட Playoff கதவு!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் 229 ரன்கள் குவித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி.

Rishan Vengai

2026 ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் கடைசி பிளேஆஃப் இடத்துக்கான போட்டி உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் சாய் சுதர்சன், சுப்மன் கில், பட்லர் ஆட்டத்தால் 229 ரன்கள் குவித்தது. 230 ரன்கள் இலக்கை துரத்த வந்த சிஎஸ்கே, சஞ்சு சாம்சன் மற்றும் உர்வில் பட்டேல் டக், மற்ற முன்னணி பேட்ஸ்மேன்கள் விரைவில் அவுட் ஆக 63 ரன்னுக்கே 5 விக்கெட் இழந்து, பிளேஆஃப் வாய்ப்பு சுருங்கும் நிலையில் திணறுகிறது.

2026 ஐபிஎல் தொடரானது புள்ளிப்பட்டியலில் ஒரு பரமபத ஆட்டத்தையே கண்டது. டாப் 4 பட்டியலில் யார் இடம்பெற போகிறார்கள் என்ற குளறுபடியானது கடைசிவரை திகில் கிளப்பிய நிலையில், ஆர்சிபி, குஜராத் மற்றும் ஹைதராபாத் முதலிய 3 அணிகளும் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்று அசத்தியுள்ளன.

சிஎஸ்கே, 2026

மீதமுள்ள கடைசி 1 இடத்துக்கு சிஎஸ்கே, ராஜஸ்தான், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நீடித்த நிலையில், முக்கியமான போட்டியில் இன்று குஜராத்தை எதிர்கொண்டு விளையாடியது சிஎஸ்கே.

பரபரப்பாக தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. ஆனால் ஏன் பந்துவீச்சை தேர்வுசெய்தோம் என வருத்தப்படும் அளவிற்கு குஜராத் டைட்டன்ஸின் அனைத்து பேட்ஸ்மேன்களும் வெளுத்துவிட்டனர். சாய் சுதர்சன் 84, சுப்மன் கில் 64 மற்றும் பட்லர் 57 ரன்கள் என அடிக்க 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 229 ரன்களை குவித்தது குஜராத் அணி.

230 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணியில் நம்பிக்கை வீரர் சஞ்சு சாம்சன் முதல் பந்திலேயே 0 ரன்னுக்கு அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அடுத்துவந்த உர்வில் பட்டேலும் 0 ரன்னுக்கு நடையை கட்ட, கேப்டன் ருதுராஜ் 16, கார்திக் சர்மா 19 மற்றும் மேத்யூ சார்ட் 24 ரன்களிலும் அவுட்டாக 63 ரன்னுக்கே 5 விக்கெட்டை இழந்து சிஎஸ்கே சொதப்பி வருகிறது. இன்றைய போட்டியில் தோற்றால் நடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து 3வது அணியாக சிஎஸ்கே வெளியேறும்.