ஜடேஜா - சஞ்சு சாம்சன் x
கிரிக்கெட்

சிஎஸ்கே| ஜடேஜாவிற்கு மாற்றாக அணியில் இணைந்தார் சஞ்சு சாம்சன்.. அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து அதிகாரப்பூர்வமாக ஜடேஜா விலகியுள்ளார்.. ராஜஸ்தான் அணியிலிருந்து சஞ்சு சாம்சன் சிஎஸ்கேவிற்கும், சென்னை அணியிலிருந்து ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் வர்த்தகம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது..

Rishan Vengai

சிஎஸ்கே அணியில் ஜடேஜாவிற்கு பதிலாக சஞ்சு சாம்சன் இணைந்துள்ளார். 2025 ஐபிஎல் தொடரில் மோசமான செயல்பாட்டைத் தொடர்ந்து, 2026 ஐபிஎல்லில் கம்பேக் செய்யும் முயற்சியில் சிஎஸ்கே பல மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் நடந்த வர்த்தகத்தில் ஜடேஜா மற்றும் சாம் கரன் ராஜஸ்தானிலும், சஞ்சு சாம்சன் சிஎஸ்கேவிலும் இணைந்துள்ளனர்.

2025 ஐபிஎல் தொடரில் படுமோசமாக செயல்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 2026 ஐபிஎல்லில் கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.. அதற்காக அணியில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர நினைக்கும் சிஎஸ்கே, சஞ்சு சாம்சனை அணியில் எடுத்துவர தீவிரம் காட்டியது..

கடந்த 3 ஐபிஎல் தொடராக தோனிக்கு மாற்று வீரர் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை தேடிவந்த சிஎஸ்கே அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.. போதாக்குறைக்கு ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் சென்னை அணியும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காணவில்லை.. இந்த சூழலில்தான் தோனிக்கு மாற்றாக சஞ்சு சாம்சனை கொண்டுவரும் வழி சென்னை அணிக்கு கிடைத்தது..

சஞ்சு சாம்சன் - தோனி

இந்நிலையில் சிஎஸ்கேவிற்கு சஞ்சு சாம்சனின் தேவை இருப்பதை அறிந்துகொண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஜடேஜா, டெவால்ட் பிரேவிஸ், துபே, பதிரானா போன்ற வீரர்களை வர்த்தகம் செய்ய டீல் பேசியது.. அதையெல்லாம் நிராகரித்த சிஎஸ்கே அணி ஜடேஜா மற்றும் சாம் கரனை அனுப்ப முடிவுசெய்து பேச்சுவார்த்தை நடத்தியது.. ராஜஸ்தானும் அதற்கு பச்சைக்கொடி காட்டியதால் வர்த்தகம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்ததாக சொல்லப்பட்டது..

ஜடேஜா

இந்தசூழலில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வர்த்தகம் செய்யப்பட்டதாக சென்னை அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது..

ஜடேஜா வெளியே.. சாம்சன் உள்ளே!

கடந்த 2012 ஐபிஎல் தொடர் முதல் சென்னை அணிக்காக விளையாடிவரும் ரவீந்திர ஜடேஜா,  2018, 2021 மற்றும் 2023 ஐபிஎல் சீசன்களில் சென்னை அணி கோப்பை வெல்ல ஒரு முக்கிய காரணியாக இருந்தார்.. 2023 ஐபிஎல் இறுதிப்போட்டியில் கடைசி 2 பந்தில் 10 ரன்கள் அடித்த ஜடேஜா, கோப்பை வென்று கொடுத்த தருணமெல்லாம் சென்னை ரசிகர்களின் நினைவிலிருந்து அகலாத பொன்னான தருணங்கள்..

அதேபோல ஆல்ரவுண்டர் சாம்கரனும் சிஎஸ்கே கோப்பை வென்ற 2021 ஐபிஎல் சீசனில் ஒரு அங்கமாக இருந்தார்.. அவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஜடேஜாவுடன் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளார்..

சென்னை அணிக்கு புதிய வரவாக கடந்த 5 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட சஞ்சு சாம்சன் சிஎஸ்கேவில் இணைந்துள்ளார்.. அவருடைய தலைமையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2022 ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது..

இந்த வர்த்தகம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கும் சிஎஸ்கே, “ஜடேஜா மற்றும் சாம்கரன் இருவருடனும் பேசியபிறகு, பரஸ்பர புரிதலுடன்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஜடேஜாவின் அசாதாரண பங்களிப்புகளுக்கும், அவர் விட்டுச் சென்ற மரபுக்கும் நாங்கள் எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். ஜடேஜா மற்றும் சாம்கரன் இருவருக்கும் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம்.

அதேபோல சஞ்சு சாம்சனையும் நாங்கள் வரவேற்கிறோம், அவருடைய திறமைகளும், சாதனைகளும் எங்கள் லட்சியத்திற்கான பார்வையை நிறைவு செய்வதாக உள்ளன. இந்த முடிவு மிகவும் யோசிக்கப்பட்டு நீண்டகால தொலைநோக்குப் பார்வையுடன் எடுக்கப்பட்டுள்ளது” என சொல்லப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரவீந்திர ஜடேஜாவை இழந்தது பெரிய இழப்பாக இருந்தாலும், நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சனை வரவேற்றுள்ளது..