NZ vs ENG
NZ vs ENG Getty Images
கிரிக்கெட்

Worldcup 2023: அடுத்தடுத்து சதமடித்த கான்வே-ரச்சின்! கோலியின் பிரத்யேக சாதனையை சமன் செய்து அசத்தல்!

Rishan Vengai

கிரிக்கெட் உலகமே எதிர்ப்பார்த்து காத்திருந்த 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரானது இன்று தொடங்கியது. 2023 ஒருநாள் உலகக்கோப்பையின் தூதராக நியமிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உலகக்கோப்பையை கொண்டு வந்து வைக்க, நரேந்திர மோடி மைதானத்தில் உலகக்கோப்பை தொடர் தொடங்கியது. முதல் போட்டியில் கடந்த உலகக்கோப்பை போட்டியின் வின்னர் மற்றும் ரன்னராக இருந்த இங்கிலாந்து vs நியூசிலாந்து அணிகளுக்கு இடையே தொடங்கியது.

ஜோ ரூட் உதவியால் 282 ரன்களை எட்டிய இங்கிலாந்து!

டாஸ் வென்று நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் பவுலிங்கை தேர்வு செய்ய, இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய பேர்ஸ்டோ மற்றும் டேவிட் மாலன் இருவரும் நிதானமான ஆட்டத்தை தொடங்கினர். மாலன் ஒருபுறம் நிற்க பேட்டிங்கிற்கு ஏதுவான ஆடுகளத்தில் பேர்ஸ்டோ பவுண்டரிகளாக விரட்டிக்கொண்டிருந்தார். ஆனால் லைன் மற்றும் லெந்துகளை சிறப்பாக வீசிய டைட்டான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹென்றி டேவிட் மலனை வெளியேற்றி அசத்தினார். ஆடுகளத்தின் தன்மையை புரிந்து பந்தை காற்றில் மெதுவாக வீசிய சாண்ட்னர் சிறப்பாக விளையாடிய பேர்ஸ்டோவை 33 ரன்களில் வெளியேற்ற இங்கிலாந்து தடுமாறியது.

ரூட்

பின்னர் கைக்கோர்த்த ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். விக்கெட்டுகள் விழுந்தாலும் ஆக்ரோசமாக ஆடும் இங்கிலாந்தின் அனுகுமுறை இந்த போட்டியிலும் தொடர்ந்தது. 4 பவுண்டரிகள், 1 சிக்சர் என விளாசி பயம் காட்டிய ஹாரி ப்ரூக்கை இளம் வீரரான ரச்சின் ரவீந்திரா வெளியேற்றி அசத்தினார். பின்னர் அடுத்தவந்த மொயின் அலியும் வெளியேற ஆட்டம் சூடுபிடித்தது. 5ஆவது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த ரூட் மற்றும் கேப்டன் பட்லர் இருவரும் சிறப்பான பார்ட்னர்ஷிப் போட மீண்டும் பந்துவீச வந்த ஹெண்ட்ரி பட்லரை 43 ரன்களில் வெளியேற்றினர். என்ன தான் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபுறம் சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் அரைதம் அடித்து அசத்தினார். 70 ரன்களை கடந்து களத்தில் இருந்த ரூட், இந்த உலகக்கோப்பையின் முதல் சதத்தை பதிவு செய்வார் என எதிர்ப்பார்த்த போது ஒரு மோசமான ஷாட் விளையாடி 77 ரன்களுக்கு வெளியேறினார். முடிவில் இங்கிலாந்து அணியால் 282 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

2 பேராக போட்டியை முடித்த கான்வே-ரச்சின்! கோலியின் பிரத்யேக சாதனை சமன்!

283 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்துக்கு ஓபனர் வில் யங்கை ஒ ரன்னி வெளியேற்றி அதிர்ச்சி கொடுத்தார் சாம் கரன். 10 ரன்னுக்கு முதல் விக்கெட்டை இழந்தாலும் பின்னர் கைக்கோர்த்த டெவான் கான்வே மற்றும் ரச்சின் ரவிந்திரா இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒருபுறம் கான்வே நிதானமாக விளையாட, 23 வயதேயான ரச்சின் ரவிந்திரா சிக்சர், பவுண்டரிகளாக விரட்டிக்கொண்டிருந்தார். பின்னர் கான்வேவும் அதிரடிக்கு திரும்ப இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இங்கிலாந்து அணி தவித்தது.

டெவான் கான்வே

அற்புதமாக விளையாடிய இருவரும் அடுத்தடுத்து சதமடித்து அசத்தினர். இந்த இரண்டு வீரர்களுக்கும் இதுவே முதல் உலகக்கோப்பையாகும். அறிமுக உலகக்கோப்பையின் முதல் போட்டியிலேயே சதத்தை பதிவு செய்து, விராட் கோலியின் பிரத்யேக சாதனையை சமன் செய்தனர். விராட் கோலி தனது அறிமுக உலகக்கோப்பையான 2011-ல் வங்கதேசத்துக்கு எதிரான முதல் போட்டியில் சதமடித்து அசத்தியிருந்தார். இந்நிலையில் விராட் கோலியோடு கான்வே மற்றும் ரச்சின் ரவிந்திரா இருவரும் இணைந்துள்ளனர். கடைசிவரை களத்தில் நின்ற கான்வே 152 ரன்கள், ரச்சின் ரவிந்திரா 123 ரன்களுடன் போட்டியை முடிவுக்கு கொண்டு வந்தனர். முடிவில் இங்கிலாந்தை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து வெற்றிபெற்றுள்ளது.

ரச்சின் ரவிந்திரா

மேலும் 273 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட இந்த ஜோடி ஒருநாள் கிரிக்கெட்டில் நியூசிலாந்தின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பை பதிவு செய்து அசத்தியுள்ளது.