ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி பார்டர் - காவஸ்கர் தொடரில் 5 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் 1-1 என்று சமனில் உள்ளன. தற்போது பிரிஸ்பேனின் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 445 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் பேட் செய்யத் தொடங்கிய இந்தியா, 51 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து பரிதாபமான நிலையில் இருக்கிறது.
இந்த நிலையில், முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா சிறப்பான பங்களிப்பை அணிக்காக வழங்கினார். அதேபோல், மூன்றாவது டெஸ்ட்டிலும் முதல் இன்னிங்ஸில் மட்டும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதற்கிடையே, நேற்று வர்ணனை செய்துகொண்டிருந்த பிரட் லீ, பும்ராவை “மிகவும் மதிப்புமிக்க வீரர்” என்று பாராட்டினார்.
இதற்குப் பதிலளித்த மற்றொரு வர்ணனையாளர் ஈஷா குகா, பும்ராவை MVP என்று கூறினார். MVP என்றால் Most valuable player என்று அர்த்தம். ஆனால் அதற்கு விளக்கம் கொடுக்கிறேன் எனப் பேசிய ஈஷா குகா, most valuable Primate என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தினார். அதாவது, “மிகவும் மதிப்புமிக்க பிரைமிட்” என்று பும்ராவை குறிப்பிட்டார். (பிரைமிட் என்பது குரங்கு இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு).
ஈஷாவின் வர்ணனை இணையத்தில் வேகமாக பரவிய நிலையில், இந்திய ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ''ஒரு வீரரைப் பாராட்ட எத்தனையோ நல்ல வார்த்தைகள் உள்ளன. ஆனால் ஈஷா குகா வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் இந்த வார்த்தையை பயன்படுத்தியுள்ளார்'' என்று இந்திய ரசிகர்கள் தெரிவித்தனர்.
மேலும் அவர்கள், ''ஈஷா குகா தான் பயன்படுத்திய வார்த்தையை திரும்பப் பெற வேண்டும். அவர் கமெண்ட்ரி செய்வதை தடை விதிக்க வேண்டும்'' என்று தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் அந்த கருத்துக்கு அவர் மன்னிப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், “பும்ரா குறித்து நான் பயன்படுத்திய வார்த்தையில் ஏதேனும் குற்றம் இருந்தால் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். பும்ரா நான் மிகவும் போற்றும் ஒருவர்; அவரைப் பாராட்டத்தான் நான் முயற்சித்தேன். ஆனால் பாராட்ட நான் தேர்ந்தெடுத்த வார்த்தை தவறானது என்பதால் வருந்துகிறேன். நீங்கள் எனது முழு பேச்சையும் கேட்டால் நான் தலைசிறந்த வீரர்களில் ஒருவரைப் பாராட்டினேன் என்பது உங்களுக்குப் புரியும். நான் அவரது சாதனையின் மகத்துவத்தை வடிவமைக்க முயற்சித்தேன். தெற்காசிய பாரம்பரியத்தைச் சேர்ந்த ஒருவர் என்ற முறையில், நான் பேசியதில் வேறு எந்த நோக்கமும் தீமையும் இல்லை என்பதை மக்கள் அங்கீகரிப்பார்கள் என்று நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.