62வது துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. இறுதிப்போட்டியில் தெற்கு மண்டலம் மற்றும் மத்திய மண்டல அணிகள் பலப்பரீட்சை நடத்திய நிலையில், ரஜத் பட்டிதார் தலைமையிலான மத்திய மண்டல அணி கோப்பை வென்று சாதனை படைத்தது.
பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தெற்கு மண்டல அணி மத்திய அணியின் சிறந்த பந்துவீச்சு தாக்குதலை சமாளிக்க முடியாமல் 149 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக பந்துவீசிய சரன்ஸ் ஜெய்ன் 5 விக்கெட்டுகளும், குமார் கார்த்திகேயா 4 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.
அதனைத்தொடர்ந்து விளையாடிய மத்திய மண்டல அணி ரஜத் பட்டிதாரின் 101 ரன்கள், யஷ் ரதோடின் 194 ரன்கள் உதவியுடன் 511 ரன்கள் குவித்து 362 ரன்கள் முன்னிலை பெற்றது.
இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய தெற்கு மண்டல அணி 426 ரன்கள் சேர்த்து 64 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அதை எளிதாக எட்டிய மத்திய மண்டல அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றியது.
10 ஆண்டுகளாக துலீப் கோப்பை வெல்லாத மத்திய மண்டல அணி ரஜத் பட்டிதார் தலைமையில் வென்று அசத்தியது. ஆர்சிபிக்காக கோப்பை வென்ற சில மாதங்களில் துலீப் கோப்பையும் வென்று சாதித்துள்ளார்.