அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில், ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ், இத்தாலியின் ஜானிக் சின்னரை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை வென்றார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில், ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ், இத்தாலியின் ஜானிக் சின்னரை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை வென்றார். இந்த வெற்றியின் மூலம், உலகத் தரவரிசையில் அல்காரஸ் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். நேற்று அமெரிக்காவில் நடைபெற்ற ஓபன் டென்னிஸ் போட்டியில், அல்காரஸ் 6-2, 3-6, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் சின்னரை வீழ்த்தினார். இந்தத் தொடரில், அல்காரஸ் இழந்த ஒரே ஒரு செட் இந்த இறுதிப் போட்டியில்தான். இது அல்காரஸின் இரண்டாவது அமெரிக்க ஓபன் பட்டம் மற்றும் ஆறாவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.
இந்த ஆண்டு இவர்கள் இருவரும் மோதிய மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டி இது. சின்னர் உடனான தொடர் போட்டிகள் தன்னை ஒரு சிறந்த வீரராக மாற்றியுள்ளதாக 22 வயதான அல்காரஸ் குறிப்பிட்டார். இன்று தான் சிறப்பாகச் செயல்பட்டதாகவும்; ஆனால் அல்காரஸ் தன்னைவிட சிறப்பாக விளையாடியதாகக் குறிப்பிட்டார் 24 வயதான சின்னர். உலக அளவில் பெரும் எதிர்பார்பை ஏற்படுத்திய இந்த இறுதிப் போட்டியைக் காண, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேரில் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.