Rohit sharma, mumbai indians
Rohit sharma, mumbai indians pt web
கிரிக்கெட்

”இந்த கேள்வியெல்லாம் என்னிடம் கேட்காதீர்கள்”-கோவப்பட்ட ரோகித் சர்மா! கேள்வியும் பின்னணியும் இதுதான்!

Rishan Vengai

2023ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடரானது வரும் அக்டோபர் 05ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதிவரை நடைபெறவிருக்கிறது. சொந்த மண்ணில் பங்கேற்று விளையாடும் இந்திய அணியே கோப்பையை வெல்ல வேண்டும் என்பது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் விருப்பமாக இருந்துவருகிறது. 2013க்கு பிறகு 10 வருடங்களாக எந்தவிதமான ஐசிசி கோப்பையையும் வெல்லாமல் இருந்து வரும் இந்திய அணி, எந்த மாதிரியான உலகக்கோப்பை அணியை அறிவிக்கப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாக இருந்துவந்தது.

இந்நிலையில், உலகக்கோப்பை தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் இருவரும் சேர்ந்து அறிவித்தனர்.

உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் செயல்படும் நிலையில் இஷான் கிஷன் மற்றும் கே எல் ராகுல் இருவரும் விக்கெட் கீப்பர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் அணிக்குள் கொண்டுவரப்பட்ட சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா இருவருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் சூர்யகுமார் யாதவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஹர்திக் பாண்டியா அணிக்கு தனிபலம் சேர்க்கிறார்!

இந்திய அணி சிறந்த வீரர்களை கொண்ட பேலன்ஸ் அணியாக இருக்கிறது என தெரிவித்த அஜித் அகர்கர் பேசுகையில், “ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே எல் ராகுல் இருவரும் அணிக்குள் திரும்பியிருப்பது அணிக்கு சமநிலையை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் ஆசியகோப்பையில் இடம்பெற்றிருந்தாலும், சிறு பிரச்னை இருந்ததால் ஆடமுடியவில்லை. ஆனால் தற்போது அவர் நன்றாக இருக்கிறார். அவர் எங்களுக்கு ஒரு முக்கியமான வீரர், அவர் அணிக்குள் வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என தெரிவித்தார்.

Rohit Sharma

மேலும் ஹர்திக் பாண்டியா குறித்து பேசிய கேப்டன் ரோகித், "நாங்கள் சிறந்த கலவையான அணியை தேர்ந்தெடுத்துள்ளோம். எங்களிடம் ஆழமான பேட்டிங் லைன் அப் உள்ளது. சுழற்பந்து மற்றும் வேகப்பந்துவீச்சு ஆப்சன் போதுமானளவு உள்ளன. ஹர்திக் பாண்டியா பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் அணிக்கு பலத்தை சேர்க்கிறார். அவருடைய தற்போதைய பேட்டிங் ஃபார்ம் உலகக்கோப்பையில் முக்கியமானதாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் 4 பேர் - திடீரென கோவப்பட்ட ரோகித் சர்மா

உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றிருக்கும் வீரர்களை ஐபிஎல் அணியின் வீரர்கள் என கணக்கிட்டால், மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து அதிகப்படியான வீரர்கள் பங்கேற்றுள்ளனர். அந்தவகையில் மும்பை இந்தியன்ஸ் - 4 பேர், குஜராத் டைட்டன்ஸ்-3, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஆர்சிபி, டெல்லி கேபிடல்ஸ் என தலா 2 பேர், லக்னோ மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் என தலா ஒரு நபர் என்று வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

Rohit Sharma

இந்நிலையில் ரோகித் சர்மாவிடம் இந்தியா-பாகிஸ்தான் மோதல் குறித்து ஒரு கேள்வி எழுப்பப்பட்ட போது அவர் கோவப்பட்டு பதிலளித்துள்ளார். அப்போது பேசிய அவர், “இந்தியாவில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தும் போது இதுபோன்ற கேள்விகளை என்னிடம் கேட்காதீர்கள். வெளியில் இருந்து வரும் இதுபோன்ற சத்தத்தை நாங்கள் கவனிக்க விரும்பவில்லை. நான் ஏற்கனவே பலமுறை சொல்லிவிட்டேன், அந்த விஷயங்களை நாங்கள் கவனிக்கவில்லை. இதுபோன்ற கேள்விகளுக்கு தற்போது பதில் கூறமுடியாது​ ” என்று காட்டமாக தெரிவித்தார்.