சர்வதேச கிரிக்கெட்டில் தேவையற்ற சாதனை படைத்த கனடா fancode
கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட்டில் முதல்முறை.. தேவையற்ற சாதனை படைத்த கனடா அணி!

ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை லீக் தகுதிச்சுற்று 2-ன் 81வது போட்டியின் போது இந்த விநோத சம்பவம் நடந்தது.

Rishan Vengai

சர்வதேச கிரிக்கெட்டில் முதல்முறையாக ஸ்காட்லாந்துக்கு எதிராக கனடா கிரிக்கெட் அணி தேவையற்ற சாதனையைப் படைத்தது.

கிரிக்கெட் களமானது சுவாரசியத்திற்கு சற்றும் பஞ்சம் இல்லாதது என்பதால் தான், கால்பந்துக்கு சமமாக உலகளவில் கிரிக்கெட் விளையாட்டு கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் பல சாதனைகள் படைக்கப்பட்டும் உடைக்கப்பட்டும் வரும் வேளையில், ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தேவையற்ற சாதனை ஒன்றை படைத்துள்ளது கனடா அணி.

இதுவரையிலான சர்வதேச கிரிக்கெட்டில் இப்படி நடப்பது இதுவே முதல்முறையாக பதிவாகியுள்ளது.

முதல்முறை பதிவான விநோத சாதனை..

2027 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைக்கான இரண்டாவது தகுதிசுற்று போட்டிகள் நடந்துவருகின்றன. இதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் கனடா அணிகள் பங்கேற்று விளையாடின.

முதலில் விளையாடிய கனடா அணி 184 ரன்களை மட்டுமே சேர்த்தது, அதனைத்தொடர்ந்து விளையாடிய ஸ்காட்லாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவுசெய்தது.

முதல் இன்னிங்ஸில் கனடா பேட்டிங் செய்தபோது அவ்வணியின் தொடக்க வீரர்கள் இருவரும் முதலிரண்டு பந்துகளில் அவுட்டாகி வெளியேறினார். ஒரு தொடக்க வீரர் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டான நிலையில், மற்றொரு தொடக்க வீரர் நான்-ஸ்டிரைக்கில் இருந்தபோது, 2வது பந்தில் ஸ்டிரைக்கில் இருந்த பேட்ஸ்மேன் அடித்தபந்து ஸ்டம்பில் பட்டதால் ரன் அவுட் மூலம் வெளியேறினார்.

இப்படி ஒரு இன்னிங்ஸின் முதல் இரண்டு பந்திலும் 2 தொடக்க வீரர்கள் அவுட்டாவது இதுவே முதல்முறை. இந்த தேவையற்ற சாதனையை கனடா ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக செய்துள்ளது.