2026 ஐபிஎல் ஏலத்திற்கு முன் நடந்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மோக் ஆக்சனில் கேமரூன் க்ரீனுக்காக சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகள் இடையே கடுமையான போட்டி நிலவியது. சுரேஷ் ரெய்னா முக்கியமான 4 வீரர்களை சிஎஸ்கேவிற்காக விலைக்கு வாங்கினார்.. அனில் கும்ப்ளே ஆர்சிபிக்காக இந்தியன் ஆல்ரவுண்டரை ஏலத்தில் எடுத்தார்.. கவனிக்கத்தக்க வீரர்களை முன்னாள் வீரர்கள் ஏலத்தில் பிட்செய்தனர்..
2026 ஐபிஎல்லுக்கான வீரர்கள் மினி ஏலம் நாளை 16ஆம் தேதி அபுதாபியில் இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு நடக்கவிருக்கிறது. ஏலத்திற்கு முன்னதாக தங்களுடைய தக்கவைப்பு மற்றும் வெளியேற்றப்பட்ட வீரர்கள் பட்டியலை அனைத்து ஐபிஎல் அணிகளும் வெளியிட்டன. குறிப்பிடத்தக்க மாற்றமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து ஜடேஜாவும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து சஞ்சு சாம்சனும் வர்த்தகம் செய்யப்பட்டு அணி மாற்றப்பட்டுள்ளனர்..
2026 ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக ஒட்டுமொத்த அணியையே கலைத்திருக்கும் கேகேஆர் அணி 64.3 கோடி பர்ஸ் உடனும், பதிரானா, கான்வே, ரச்சின் ரவீந்திரா போன்ற வீரர்களை வெளியேற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 43.4 கோடி ரூபாய் பர்ஸ் உடனும் ஏலத்தில் களம்புகவிருக்கின்றன. இரண்டு அணிகளுக்கும் இடையே வலுவான போட்டி இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்தசூழலில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நடத்திய போலி ஏலத்தில் சிஎஸ்கே அணிக்கும், கேகேஆர் அணிக்கும் இடையே கேமரூன் க்ரீனுக்கு பலத்த போட்டி நிலவியது. சிஎஸ்கேவிற்காக சுரேஷ் ரெய்னாவும், கொல்கத்தாவிற்காக ராபின் உத்தப்பாவும் க்ரீனுக்காக போட்டிப்போட்டனர்.
நடைபெற்ற ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மோக் ஆக்சனில் சிஎஸ்கே அணிக்காக சுரேஷ் ரெய்னா, கேகேஆர் அணிக்காக உத்தப்பா, ஆர்சிபி அணிக்காக அனில்கும்ப்ளே, டெல்லிக்காக கைஃப், ராஜஸ்தானுக்காக ஆகாஷ் சோப்ரா, குஜராத்துக்காக புஜாரா, மும்பைக்காக அபினவ் முகுந்த், ஹைத்ராபாத்துக்காக பத்ரிநாத், லக்னோவிற்காக இர்ஃபான் பதான், பஞ்சாப்புக்காக சஞ்சய் பங்கர் ஆகியோர் ஏலத்தில் பங்கேற்றனர்..
நடந்த மோக் ஆக்சனில் அதிகவிலை போன வீரராக கேமரூன் க்ரீன் மாறினார். எதிர்ப்பார்க்கப்பட்டது போல சிஎஸ்கே அணிக்கும், கேகேஆர் அணிக்கும் இடையே க்ரீனுக்காக போட்டி நிலவியது. 30 கோடிவரை சிஎஸ்கேவிற்காக சுரேஷ் ரெய்னா போட்டியிட்ட நிலையில், 30.50 கோடிக்கு கேகேஆர் அணிக்காக க்ரீனை தட்டித்தூக்கினார் ராபின் உத்தப்பார். மேலும் 13 கோடிக்கு பதிரானாவையும் கேகேஆர் அணிக்காக உத்தப்பா வாங்கினார்.
சிஎஸ்கே அணியில் அதிகபட்ச விலையாக 10 கோடிக்கு ராகுல் சாஹர், 7.50 கோடிக்கு தென்னாப்பிரிக்கா வேகப்பந்துவீச்சாளர் ஆன்ரிச் நார்கியா, 7 கோடிக்கு சர்பராஸ் கான், 2.50 கோடிக்கு இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஷிவம் மாவி, 2 கோடிக்கு இலங்கை சுழற்பந்துவீச்சாளர் ஹசரங்கா முதலிய வீரர்களை ஏலத்தில் பிக் செய்தார் சுரேஷ் ரெய்னா.
இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டனுக்கும் இந்த ஏலத்தில் நல்ல மதிப்பு இருந்தது. அவரை 19 கோடிக்கு லக்னோ அணிக்காக ஏலத்தில் எடுத்தார் இர்ஃபான் பதான். வெங்கடேஷ் ஐயரை 6 கோடிக்கு ஆர்சிபிக்காக விலைக்கு வாங்கினார் அனில் கும்ப்ளே.