பும்ரா
பும்ரா pt web
கிரிக்கெட்

IND vs ENG | 4 ஆவது டெஸ்ட்: பும்ரா இல்லை... பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பு

Angeshwar G

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

ஜெய்ஸ்வால்

கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி ராஜ்கோட்டில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. முதல் இன்னிங்ஸில் ரோஹித், ஜடேஜா சதமடித்த நிலையில் இந்திய அணி 445 ரன்களைக் குவித்தது. இரண்டாவது இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் இரட்டை சதமும், சுப்மன்கில் 91 ரன்களையும் அடிக்க 430 ரன்களைக் குவித்தது இந்திய அணி. இங்கிலாந்து அணியை 122 ரன்களுக்கு சுருட்டிய இந்திய அணி பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்தது.

பும்ரா

இந்தியா இங்கிலாந்து இடையேயான 4 ஆவது டெஸ்ட் ராஞ்சியில் பிப்ரவரி 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணி செவ்வாய்கிழமை விமானத்தில் ராஞ்சிக்கு சென்றுள்ளது.

இந்நிலையில், 4 ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. 4 ஆவது போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா விடுவிக்கப்பட்டுள்ளார்.

“தொடரின் காலம் மற்றும் சமீபத்தில் அவர் விளையாடிய கிரிக்கெட்டின் அளவைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என பிசிசிஐ தெரிவித்துள்ளது. அவருக்குப் பதிலாக முகேஷ்குமார் விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.

சமீபத்தில் பீகார் மற்றும் பெங்காலுக்கு இடையே நடந்த ரஞ்சி போட்டியில், பெங்கால் அணியின் முகேஷ் குமார் இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 10 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்களையும் வீழ்த்தி பெங்கால் அணி மிகப்பெரிய வெற்றியை பெற உதவினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காயம் காரணமாக விலகி இருக்கும் ராகுல் நான்காவது போட்டியிலும் இடம்பெறவில்லை. இதுதொடர்பாக அறிக்கையில் தெரிவித்துள்ள பிசிசிஐ, “4 ஆவது டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுல் இடம்பெறவில்லை. தர்மசாலாவில் நடைபெறும் இறுதி டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்பது அவரது உடற்தகுதிக்கு உட்பட்டது” என தெரிவித்துள்ளது. இதன் மூலம் தனது முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் சரியாக விளையாடாத ரஜத் படிதார் மீண்டும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

4 ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் வீரர்கள் விபரம்: ரோஹித் சர்மா(கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், ரஜத் படிதார், சர்பராஸ் கான், துருவ் ஜூரல் (WK), கேஎஸ் பரத் (WK), தேவ்தத் படிக்கல், அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப்.