2026 டி20 உலகக்கோப்பையில் இந்தியா தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்ட சூப்பர் 8 போட்டியில், பும்ரா 4 ஓவரில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தார். இதனால் அவர் டி20 உலகக்கோப்பையில் இந்தியாவிற்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலராக மாறினார்.
2026 டி20 உலகக்கோப்பை தொடர் பரபரப்பாக நடந்துவருகிறது. ஒரு கோப்பைக்காக 20 அணிகள் பங்கேற்ற நிலையில், பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணி லீக் சுற்றோடு தொடரிலிருந்து வெளியேறியது.
இந்தியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, இலங்கை, நியூசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான் முதலிய 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன.
இந்நிலையில் இன்று நடைபெற்ற தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் இந்தியா விளையாடியது.
அகமதாபத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ரா தொடக்கத்திலேயே டிகாக், ரிக்கல்டன் இருவரையும் ஓரிலக்க ரன்னில் வெளியேற்றி அதிர்ச்சி கொடுத்தார்.
தொடர்ந்து சிறப்பாக பந்துவீசிய ஜஸ்பிரித் பும்ரா 4 ஓவரில் 15 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்ற 20 ஓவரில் 187 ரன்களை அடித்தது தென்னாப்பிரிக்கா அணி.
இந்தப்போட்டியில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஜஸ்பிரித் பும்ரா, டி20 உலகக்கோப்பையில் இந்தியாவிற்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலராக மாறி சாதனை படைத்தார். 32 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருந்த அர்ஷ்தீப் சிங்கை, 33 விக்கெட்டுகள் கைப்பற்றி பின்னுக்கு தள்ளினார் பும்ரா.
டி20 உலகக்கோப்பையில் இந்தியாவிற்காக அதிக விக்கெட்டுகள்:
1. ஜஸ்பிரித் பும்ரா - 33*
2. அர்ஷ்தீப் சிங் - 32*
3. ஆர் அஸ்வின் - 32
4. ஹர்திக் பாண்டியா - 29
5. ரவீந்திர ஜடேஜா - 22