INDvAUS
INDvAUS Shailendra Bhojak
கிரிக்கெட்

INDvAUS | இந்தியா vs ஆஸ்திரேலியா தொடரில் அசத்திய டாப் 4 பௌலர்கள் யார்?

Viyan

ஐசிசி உலகக் கோப்பை தொடர் முடிந்த பிறகு ஆஸ்திரேலிய அணியோடு இந்தியா 5 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரில் விளையாடியது. உலகக் கோப்பையில் ஆடிய பல வீரர்கள் இத்தொடருக்கு ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், சூர்யகுமார் யாதவ் தலைமையில் இளம் இந்திய அணி இத்தொடரில் களமிறக்கப்பட்டது. மூன்றாவது போட்டியை மற்றும் தோற்ற இந்திய அணி, மற்ற 4 போட்டிகளையும் வென்று 4-1 என தொடரை வென்றது. பல இளம் இந்திய வீரர்கள் அசத்தியிருக்கிறார்கள். ஆஸ்திரேலிய அணியோ கிட்டத்தட்ட 19 வீரர்களைப் பயன்படுத்தியிருக்கிறது. அந்த அணியிலும் ஒருசில வீரர்கள் சிறப்பாகவே செயல்பட்டிருக்கின்றனர். ஒட்டுமொத்தமாக இந்தத் தொடரில் அசத்தியிருக்கும் டாப் 4 பௌலர்கள் யார் யார்..?

ரவி பிஷ்னாய் - இந்தியா

ரவி பிஷ்னாய்

இந்த தொடரின் தொடர் நாயகனாக உருவெடுத்திருக்கும் பிஷ்னாய், மொத்தம் 5 போட்டிகளில் 9 விக்கெட்டுகள் வீழ்த்தி டாப் விக்கெட் டேக்கராக திகழ்ந்தார். தொடர் முழுவதுமே ஆஸ்திரேலிய வீரர்களுக்குப் பெரும் சவாலாக விளங்கினார் அவர். இரண்டாம் கட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் அவரின் கூக்ளியை சரியாகக் கணிக்க முடியாமல் திணறினார்கள். வழக்கமாக மிடில் ஓவர்களில் அசத்தும் அவர், இந்தத் தொடரில் பவர்பிளே ஓவர்களில் ஆஸ்திரேலியாவுக்கு பெரும் தலைவலியாக இருந்தார். 5 போட்டிகளில், நான்கில் பவர்பிளேவுக்குள்ளேயே ஒரு விக்கெட்டாவது எடுத்திருக்கிறார் அவர். அதிலும் கடைசி போட்டியில் இந்தியாவுக்குப் பெரும் சவாலாக இருந்த டிராவிஸ் ஹெட்டை அவர் அவுட்டாக்கிய விதம் ஒரு பௌலராக அவர் எவ்வளவு முதிர்ச்சியடைந்திருக்கிறார் என்பதைக் காட்டியது.

அக்‌ஷர் படேல் - இந்தியா

அக்‌ஷர் படேல்

ரவி பிஷ்னாய் ஒரு எண்டில் ஆஸ்திரேலிய பௌலர்களை தடுமாற வைத்தார் என்றால், அக்‌ஷர் படேல் இன்னொரு எண்டில் இருந்து மிரட்டினார். பவர்பிளே, மிடில் ஓவர் இரண்டிலுமே கலக்கினார். தன் வழக்கமான பந்துவீச்சுப் பாணியைக் கடைபிடித்த அவர், மிகவும் சிக்கனமாகப் பந்துவீசி ரன் ரேட்டைக் கட்டுப்படுத்தத் தொடங்கினார். அது களத்தில் இருந்த பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்த, அவர்கள் மற்ற பௌலர்களை டார்கெட் செய்து அவுட் ஆகத் தொடங்கினார்கள். கடைசி போட்டியில் கூட 4 ஓவர்களில் வெறும் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார் அக்‌ஷர். பௌலிங்கில் கலக்கிய அளவுக்கு பேட்டிங்கில் அவர் பெரிய பங்களிப்பைக் கொடுக்கவில்லை. கடைசி போட்டியில் மட்டும் அட்டகாசமான இன்னிங்ஸ் ஆடி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்க பெரிதாக உதவி செய்தார் அக்‌ஷர். ஷ்ரேயாஸ் ஐயர் உடன் இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்த அவர், 21 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து அசத்தினார் அவர்.

ஜேசன் பெரண்டார்ஃப் - ஆஸ்திரேலியா

Jason Behrendorff

இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய அணி படுதோல்வி அடைந்திருந்தாலும் பெரண்டார்ஃபின் செயல்பாடு அந்த அணிக்கு மிகப் பெரிய ஆறுதலாக இருக்கும். அனைத்து போட்டிகளிலுமே சிக்கனமாகப் பந்துவீசிய இந்த இடது கை வேகப்பந்துவீச்சாளர், 4 போட்டிகளில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். கவுஹாத்தியில் நடந்த மூன்றாவது போட்டியில் இந்திய அணி 222 ரன்கள் குவித்திருந்தது. ஆனால், அப்படிப்பட்ட போட்டியிலும் கூட 4 ஓவர்களில் வெறும் 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்க்ட் வீழ்த்தினார் அவர். ஒரு மெய்டன் ஓவர் வேறு வீசியிருந்தார் அவர். முதல் போட்டியிலுமே கூட 1 மெய்டன் வீசி அசத்தினார். இரண்டாவது டி20 போட்டியில் பெரண்டார்ஃபை களமிறக்காத ஆஸ்திரேலிய அணி அவரது அருமையை உணர்ந்தது.

முகேஷ் குமார் - இந்தியா

Mukesh Kumar

இந்தத் தொடரில் இந்திய அணிக்குப் பெரும் நம்பிக்கையாய் உதயமாகியிருக்கிறார் முகேஷ் குமார். 4 போட்டிகளில் அவர் எடுத்திருப்பது 4 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்திருக்கிறார் முகேஷ் குமார். இருந்தாலும் சரியான தருணத்தில் தன்னுடைய சிறப்பான செயல்பாட்டைக் காட்டினார் அவர். இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் டெத் ஓவர்கள் பெரிதாகத் தடுமாற, இவர் யார்க்கர்களை அற்புதமாக வீசி ஆஸ்திரேலிய பேட்டர்களைக் கட்டுப்படுத்தினார். இந்தத் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 208 ரன்கள் விளாசியது. ஆனால் அப்படிப்பட்ட ஒரு இன்னிங்ஸின் கடைசி ஓவரில் வெறும் 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார் முகேஷ். இந்தத் தொடரில் அவர் ஆடாத ஒரேயொரு போட்டியில் தான் இந்திய அணி தோல்வியடைந்தது.