eng vs nz web
கிரிக்கெட்

ENG - NZ அணிகளுக்கு 3 WTC புள்ளிகளை குறைத்து அபராதம்.. ICC-க்கு பென் ஸ்டோக்ஸ் பதிலடி பதிவு!

முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் ஓவர்களை வீச அதிகநேரம் எடுத்துக்கொண்டதாக 3 WTC புள்ளிகளை குறைத்து தண்டித்துள்ளது ஐசிசி. இது WTC புள்ளி பட்டியலையே தலைகீழாக மாற்றியுள்ளது.

Rishan Vengai

2023-2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷ்ப் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எதிர்வரும் ஜுன் மாதம் புகழ்பெற்ற லண்டன் மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெற உள்ள நிலையில், பைனலுக்கு செல்ல இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை, நியூசிலாந்து முதலிய 5 அணிகளுக்கு இடையே பலத்தபோட்டி நிலவுகிறது.

அனைத்து அணிகளுக்கும் கடைசியாக 4 முதல் 5 போட்டிகளே மீதமுள்ள நிலையில், ஒவ்வொரு போட்டியின் வெற்றி தோல்வியும் புள்ளிப்பட்டியலை தலைகீழாக மாற்றிவருகின்றன.

ind vs nz

அந்தவகையில் இந்தியாவை அதன் சொந்த மண்ணிலேயே வைத்து 3-0 என ஒயிட்வாஷ் செய்த நியூசிலாந்து அணி, WTC பைனல் செல்வதற்கான வாய்ப்பை பிரகாசமாக்கின. அதன்படி மீதமிருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகளில் நியூசிலாந்து வெற்றிபெற்றால் இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் இருந்தன.

ஆனால் தற்போது ஐசிசி விதித்திருக்கும் அபராதமானது நியூசிலாந்தின் கனவை சுக்குநூறாகியுள்ளது. இந்த நிலையில்தான் ஐசிசியின் முடிவை பென் ஸ்டோக்ஸ் விமர்சித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

15% போட்டிக்கட்டணம், 3 WTC புள்ளிகள் குறைப்பு..

கிறிஸ்ட்சர்ச்சில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 348 ரன்களும், இங்கிலாந்து 499 ரன்களும் அடித்தன.

151 பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய நியூசிலாந்து அணி 254 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவுசெய்தது.

new zealand

ஆனால் போட்டிக்கு பிறகு இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு ஸ்லோ ஓவர் ரேட் விதிமுறைப்படி போட்டிக்கட்டணத்தில் 15% அபராதமும், 3 WTC புள்ளிகளை குறைத்தும் பெனால்டி வழங்கப்பட்டது. அதவாது இரண்டு அணிகளும் 3 ஓவர்கள் வீச அதிகநேரம் எடுத்துக் கொண்டதால் 3 WTC புள்ளிகள் குறைத்து பெனால்டி விதிக்கப்பட்டுள்ளது. ஐசிசி விதிமுறைப்படி எத்தனை ஓவர்கள் குறிப்பிட்ட நேரத்தை கடந்து மெதுவாக வீசப்படுகிறதோ அத்தனை புள்ளிகள் குறைக்கப்படும். இரண்டு அணி கேப்டன்களும் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் மேற்படி எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை.

10 மணிநேரத்திற்கு முன்னதாகவே போட்டியை முடித்துவிட்டோம்..

இங்கிலாந்து அணி WTC இறுதிப்போட்டிக்கான ரேஸில் இல்லையென்றாலும், பைனல் செல்வதற்கான வாய்ப்பு இருந்த நியூசிலாந்து அணிக்கு 3 புள்ளிகள் குறைப்பு என்பது பேரிடியாக விழுந்துள்ளது. இதன்மூலம் 4வது இடத்தில் இருந்த நியூசிலாந்து அணி 5வது இடத்திற்கு சரிந்துள்ளது.

WTC Points Table

இந்நிலையில் ஐசிசியின் பெனால்டி அணுகுமுறையை நக்கல் செய்யும் வகையில் விமர்சித்திருக்கும் பென் ஸ்டோக்ஸ், “நல்லது ஐசிசி, ஆனால் நாங்கள் போட்டியை குறிப்பிட்ட நேரத்திற்கும் கீழாக 10 மணிநேரத்திற்கு முன்பே முடித்துவிட்டோம்” என்று இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். இதன்பொருள் 3 ஓவர்கள் மெதுவாக வீசியதற்காக பெனால்டி என்றால், நாங்கள் 5 நாட்களுக்கு முன்னதாகவே போட்டியை முடித்துவிட்டோமே என்ற கேள்வியை எழுப்பும் வகையில் பென் ஸ்டோக்ஸ் பதிவிட்டுள்ளார்.

பென் ஸ்டோக்ஸின் பதிவை கிரிக்கெட் ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.