இந்தியா - பிசிசிஐ web
கிரிக்கெட்

'கைக்குலுக்க வேண்டிய கட்டாயம் இல்லை..' - இந்திய அணியின் முடிவுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஓபன்!

பாகிஸ்தான் அணியிடம் கைக்குலுக்க வேண்டிய கட்டாயமில்லை என பிசிசிஐ அதிகாரி தெரிவித்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

Rishan Vengai

2025 ஆசிய கோப்பை தொடர் துபாய் மற்றும் அபுதாபி மைதானங்களில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின.

இந்திய அணியின் அசத்தலான பந்துவீச்சை சமாளிக்க முடியாத பாகிஸ்தான் அணி 20 ஓவரில் வெறும் 127 ரன்களை மட்டுமே அடித்தது. மிக எளிதான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 15.5 ஓவரிலேயே இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பதிவுசெய்தது.

இந்தியா

போட்டி தொடங்குவதற்கு முன்பான டாஸ் போடும்போதே இரண்டு அணி கேப்டன்களும் கைக்குலுக்காத நிலையில், போட்டி முடிந்தபிறகும் இந்திய வீரர்கள் யாரும் பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்காமல் மேலே சென்று அறையை அடைத்துக் கொண்டனர்.

இந்த சம்பவம் இணையத்தில் பேசுபொருளாக இருந்துவரும் நிலையில், பிசிசிஐ இதில் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறது என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் பேசியது தெரியவந்துள்ளது.

கைக்குலுக்க வேண்டிய கட்டாயம் இல்லை..

பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்க வேண்டாம் என்ற முடிவானது, இந்திய மக்களின் உணர்வுகளை கருத்தில்கொண்டு பெரிய ஆலோசனைக்கு பிறகு முடிவெடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த சூழலில் பிடிஐ வெளியிட்டிருக்கும் ஒரு செய்தியின் படி, கைக்குலுக்க வேண்டியது கட்டாயம் இல்லை என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் குறித்து பேசியிருக்கும் பிசிசிஐ அதிகாரி ஒருவர், “நீங்கள் விதிமுறைகளை பார்த்தால் எதிரணிகளுடன் கைகுலுக்குவது குறித்து எந்த விதிமுறையும் இல்லை. இது ஒரு நல்லெண்ணத்தில் செய்யப்படும் ஒரு செயல் மற்றும் ஒரு வகையான மரபு; சட்டம் அல்ல, இது உலகளவில் விளையாட்டில் பின்பற்றப்படுகிறது.

கைக்குலுக்குவது சட்டம் இல்லையென்றால், இந்திய கிரிக்கெட் அணி நீண்ட காலமாகப் பதட்டமான உறவைக் கொண்ட ஒரு எதிர்தரப்புடன் கைகுலுக்க வேண்டிய கட்டாயம் இல்லை” என்று கூறியதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.