செய்தியாளர்: சந்தான குமார்
ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி தொடர் வருகின்ற பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது. பல்வேறு சிக்கல்களுக்கு பின் மிக கால தாமதமாக தொடருக்கான அட்டவணை வெளியான நிலையில் 12ஆம் தேதிக்குள் ஒவ்வொரு அணியும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியை பதிவு செய்ய வேண்டும் என ஐ.சி.சி தெரிவித்துள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில் ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ஆலோசனை கூட்டம் பிசிசிஐ சார்பில் நாளை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
20 வது ஓவர் உலக கோப்பை தொடருக்கு பின் T20 போட்டிகளில் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜடேஜா ஓய்வு பெற்று இருந்தாலும் மூவரும் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட உள்ளனர். இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப்பின் அடுத்த ஒரு நாள் போட்டிக்கான ஐ.சி.சி தொடர் 2027ஆம் ஆண்டுதான் என்பதால் இந்தியாவின் நட்சத்திரங்களாக இருக்கும் ரோகித், விராட், ஜடேஜா உள்ளிட்டோரின் கடைசி ஐ.சி.சி தொடராக இருக்கும் என பார்க்கப்படுகிறது. காரணம் அதற்கு பின் இந்தியா அடுத்த கட்ட அணியை நோக்கி பயணம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காயம் காரணமாக இந்திய அணியில் விளையாடமல் உள்ள ஷமி மற்றும் குல்தீப் யாதவ் தற்போது பயிற்சியை தொடங்கிய நிலையில் இவர்கள் தேர்வு குறித்தும், 2023ஆம் ஆண்டு உலக கோப்பைக்கு பின் இந்திய அணியில் தேர்வு செய்யப்படாமல் உள்ள ஷ்ரேயாஸ் ஐயர் குறித்தும் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவதால் ஷ்ரேயாஸ் ஐயருக்கு அணியில் வாய்ப்பு இருக்கும் என சொல்லப்படுகிறது.
அதேபோல இந்திய T20 அணியில் மிக சிறப்பாக பந்து வீசி வரும் ஆர்ஷ்தீப் சிங் சாம்பியன்ஸ் டிராபி அணிக்கு தேர்வு செய்வது தொடர்பாகவும், T20 அணியில் சுழற்பந்து வீச்சில் சிறப்பாக விளையாடி வரும் வருண் சக்கரவர்த்தியை தேர்வு செய்வது தொடர்பாகவும் விவாதிக்கப்படும் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
கம்பீர் தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வெற்றி பெறுவது மிக முக்கியம் என்பதால் இந்த ஆலோசனை கூட்டம் மிக முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.