rahul dravid
rahul dravid PT
கிரிக்கெட்

”இன்னும் வேலைமுடியல; புதிய சவால் காத்திருக்கு”- பதவிக்காலம் நீட்டிப்பு குறித்து டிராவிட் நெகிழ்ச்சி!

Rishan Vengai

புதிய சவால்களை எதிர்நோக்குகிறோம்! - ராகுல் டிராவிட்

சமீபத்தில் முடிவடைந்த 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய தலைமை பயிற்சியாளருக்கான ராகுல் டிராவிட்டின் பதவிகாலம் முடிவுக்கு வந்தது. உலகக்கோப்பையை வெல்ல முடியாமல் போனதால் ராகுல் டிராவிட் பதவியில் தொடர மாட்டார், பிசிசிஐ வேறு தலைமை பயிற்சியாளரை நியமிக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது.

இந்நிலையில், ராகுல் டிராவிட் உடன் கலந்துரையாடிய பிசிசிஐ, ஒரு ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு பிறகு தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் தொடர்ந்து செயல்படுவதற்கும், அவருடைய குழுவினரும் தொடர்ந்து செயல்படுவதற்கும் ஒருமனதாக ஒப்புதல் வழங்கியுள்ளது.

Rahul Dravid

பிசிசிஐ வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இந்திய அணியை வடிவமைப்பதில் டிராவிட்டின் முக்கிய பங்கை பிசிசிஐ மதிப்பதோடு, அவரது விதிவிலக்கான தொழில்முறையையும் பாராட்டுவதாக தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் டிராவிட் உடன் NCA-ன் தலைவராகவும், டிராவிட் இல்லாத போது இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் செயல்படும் VVS லக்சுமனையும் பாராட்டியுள்ளது.

புதிய சவால்களை எதிர்நோக்குகிறோம்! - ராகுல் டிராவிட்

BCCI-ன் ஆதரவிற்கு நன்றி தெரிவித்துள்ள ராகுல் டிராவிட், புதிய சவால்களில் சிறந்து விளங்க காத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியிருக்கும் ராகுல் டிராவிட், “ இந்திய அணியுடன் கடந்த இரண்டு வருடங்கள் பயணித்தது ஒரு மறக்க முடியாத தருணமாக இருந்தது. தோல்வியின் போதும் வென்றியின் போதும் நாங்கள் ஒன்றாகவே அதை எதிர்கொண்டுள்ளோம். இந்தப் பயணம் முழுவதும், குழுவிற்குள் இருந்த ஆதரவும் தோழமையும் தனிச்சிறப்பு வாய்ந்தது. டிரெஸ்ஸிங் ரூமில் நாங்கள் உருவாக்கியுள்ள ஒரு கலாச்சாரத்தைப் பற்றி நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். இது வெற்றி அல்லது துன்பம் இரண்டுவிதமான தருணத்திலும் ஒன்றாக நிலைத்து நிற்கும் ஒரு கலாச்சாரம். எங்கள் குழு வைத்திருக்கும் திறமைகள் தனித்துவமானது, அவர்களின் தாக்கத்தால் அணியில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக நான் நம்புகிறேன்” என்று பேசியுள்ளார்.

ராகுல் டிராவிட்

மேலும் தன்னுடைய குடும்பத்திற்கும், பிசிசிஐ-க்கும் நன்றி தெரிவித்த ராகுல், “இந்த காலகட்டத்தில் என் மீது நம்பிக்கை வைத்ததற்காகவும், எனது எதிர்கால பார்வையை ஆதரித்ததற்காகவும் பிசிசிஐ மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். மேலும் இந்த தருணத்தில் எனது குடும்பத்தாரின் தியாகங்களுக்கும், ஆதரவிற்கும் நன்றிசொல்ல கடமைப்பட்டுள்ளேன். உலகக் கோப்பைக்குப் பிறகு புதிய சவால்களைத் எதிர்நோக்கும்போது, ​​சிறந்ததை வெளிக்கொண்டுவர நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்று டிராவிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.