ind vs ban
ind vs ban Twitter
கிரிக்கெட்

வீணான சுப்மன் கில்லின் சதம்! கடைசி ஓவர்வரை சென்ற ஆட்டம்; இந்தியாவை வீழ்த்தி வங்கதேசம் த்ரில் வெற்றி!

Rishan Vengai

கடந்த ஆகஸ்ட் 30தேதி முதல் நடந்துவரும் 2023 ஆசியக்கோப்பை தொடர் அதன் கடைசி லீக் போட்டியை எட்டியுள்ளது. கோப்பையை உறுதி செய்யும் இறுதிப்போட்டியானது இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நாளை மறுநாள் ஞாயிறு கிழமை கொழும்புவில் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில், சூப்பர் 4 சுற்றின் கடைசி லீக் போட்டியானது இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்றது.

ஷாகிப் உதவியால் நல்ல ஸ்கோரை எட்டிய வங்கதேசம்!

டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய வங்கதேச அணிக்கு தொடக்கத்திலேயே அதிச்சிகொடுத்தார் முகமது ஷமி. விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸை ஷமி போல்டாக்கி வெளியேற்ற, தன்னுடைய பங்கிற்கு அறிமுக வீரர் ஹாசனை போல்டாக்கி அனுப்பி வைத்தார் ஷர்துல் தாக்கூர். அடுத்துவந்த அனமுல்லை 4 ரன்னில் ஷர்துல் வெளியேற்ற, மெஹிதி ஹாசனை 13 ரன்னில் வெளியேற்றி இந்த தொடரில் தன்னுடைய முதல் விக்கெட்டை கைப்பற்றினார் அக்சர் பட்டேல். 59 ரன்களிலேயே அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை இழந்த வங்கதேச அணி தடுமாறியது.

Shakib Al Hasan

பின்னர் 5வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த கேப்டன் ஷகிப் அல் ஹசன் மற்றும் டோவ்ஹிட் ஹ்ரிடோய் (Towhid Hridoy ) இருவரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அடுத்தடுத்து அரைசதம் போட்ட இருவரும் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அணியை சரிவிலிருந்து மீட்டனர். சிறப்பாக செயல்பட்ட இந்த ஜோடியை 80 ரன்களில் ஷாகிப் அல் ஹசனை வெளியேற்றி முடிவுக்கு கொண்டுவந்தார் ஷர்துல் தாக்கூர். அடுத்துவந்த மிடில் ஆர்டர் வீரர்கள் ஷாகிப் விட்ட இடத்திலிருந்து தொடங்கினர். நசும் அஹ்மது 44 ரன்கள், மெஹிதி ஹாசன் 29 ரன்கள், தன்ஷிம் 14 ரன்கள் என இறுதியில் ரன்கள் சேர்க்க 50 ஓவர் முடிவில் வங்கதேசம் 265 ரன்கள் சேர்த்தது.

அபாரமாக விளையாடி சதமடித்த சுப்மன் கில்! முடிவில் மாறிய போட்டி!

இதனையடுத்து 266 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு டக் அவுட் ஆகி தொடக்கத்திலேயே அதிர்ச்சி கொடுத்தார் கேப்டன் ரோகித் சர்மா. இந்த தொடரில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரோகித் ஆட்டமிழந்தது இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல், ஒரு நாள் போட்டியில் இன்று அறிமுகப்போட்டியில் களமிறங்கிய திலக் வர்மாவும் 5 ரன்னில் நடையைக் கட்டினார். பின்னர், சீரான இடைவெளியில் விக்கெட் வீழ்ந்த வண்ணம் இருந்தாலும் சுப்மன் கில் மட்டும் நிலைத்து ஆடினார்.

Gill

கே.எல்.ராகுல் 19, இஷான் கிஷன் 5, சூர்ய குமார் 26, ஜடேஜா 7 என யாரும் நிலைத்து நிற்கவில்லை. சதம் விளையாசிய சுப்மன் கில் 121 ரன்களில் ஆட்டமிழக்க, கடைசி நேரத்தில் மல்லுக்கட்டினார் அக்ஸர் பட்டேல். அவர் தான் போட்டியை கடைசி ஓவர் வரை கொண்டு சென்றார். அவர் களத்தில் இருந்தவரை போட்டி இந்திய அணியின் பக்கம் இருந்தது.

Axar Patel

ஆனால், 42 ரன்களில் அவர் ஆட்டமிழக்க இந்திய அணியின் தோல்வி உறுதி ஆனது. இந்திய அணி 49.5 ஓவர்களில் 259 ரன்கள் எடுக்க 6 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் த்ரில் வெற்றிபெற்றது. வங்கதேச அணிக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்தது. அதுவும் பலம் வாய்ந்த இந்திய அணியை வீழ்த்தியது அந்த அணிக்கு மிகப்பெரிய வெற்றியாக அமைந்துவிட்டது.

80 ரன்கள் அடித்ததோடு சூர்ய குமாரின் விக்கெட்டையும் வீழ்த்திய கேப்டன் ஷகிப் அல் ஹசன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.