ipl, Mustafizur Rahman x page
கிரிக்கெட்

வீரரை வெளியேற்றிய விவகாரம் | ஐபிஎல் தொடர், விளம்பரங்களை ஒளிபரப்ப தடை.. வங்கதேசம் அதிரடி!

வங்கதேசத்தில் ஐபிஎல் நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்களை ஒளிபரப்பத் தடை செய்யப்பட்டுள்ளது.

Prakash J

வங்கதேசத்தில் ஐபிஎல் நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்களை ஒளிபரப்பத் தடை செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் அங்கம் வகிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி, வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மானை ஏலம் எடுத்திருந்தது. இதற்கிடையே, வங்கதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற வன்முறையில் இந்து மதத்தைச் சேர்ந்த இருவர் அடித்துக் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு எதிராகத் தாக்குதல் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து, முஸ்தாபிசுர் ரஹ்மானை கேகேஆர் அணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என எதிர்ப்பலைகள் எழுந்தன. இதையடுத்து பிசிசிஐ அவரை, உடனே நீக்க வேண்டும் என அணி நிர்வாகத்திடம் வலியுறுத்தியிருந்தது. இவ்விவகாரம் விஸ்வரூபமெடுத்த நிலையில், வங்கதேச கிரிக்கெட் வாரியம் இந்தியாவில் நடக்கவிருக்கும் உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்ததுடன், ஐசிசிக்கும் கடிதம் எழுதியுள்ளது.

ipl, Mustafizur Rahman

இந்த நிலையில், ஐபிஎல் ஒளிபரப்பு மற்றும் விளம்பரத்திற்கும் வங்காளதேச அரசு காலவரையற்ற தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக, இன்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ஐபிஎல் தொடர்பான அனைத்து ஒளிபரப்புகள், விளம்பரங்கள் மற்றும் நிகழ்வு ஒளிபரப்பு உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மறு உத்தரவு வரும் வரை அப்படியே இருக்கும் என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். வங்கதேச அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த நடவடிக்கை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுறுத்தலாக தெரிவிக்கப்பட்டது. மேலும் எந்தவொரு தர்க்கரீதியான காரணமும் இல்லை என்று விவரிக்கப்பட்டுள்ளது.