பும்ரா - ஷமி pt
கிரிக்கெட்

”பும்ராவிற்கு முன்பே இந்தியாவின் சிறந்த பவுலர் அவர்தான்” ஷமியின் முக்கியத்துவம் குறித்து பாலாஜி ஓபன்

இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியில் சிறப்பாக செயல்பட வேண்டுமானால் முகமது ஷமி சிறப்பாக திரும்ப வேண்டும் என லட்சுமிபதி பாலாஜி தெரிவித்துள்ளார்.

Rishan Vengai

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து காயம் காரணமாக இந்தியாவின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணியிலிருந்து வெளியேறியுள்ளார். அவருக்கு மாற்றுவீரராக வேகப்பந்துவீச்சாளர் ஹர்சித் ரானா தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

பும்ரா

இந்தியாவின் வேகப்பந்துவீச்சை பொறுத்தவரையில் காயத்திலிருந்து திரும்பி வந்திருக்கும் முகமது ஷமி, அனுபவமில்லாத ஹர்சித் ரானா என பின்னடைவாகவே இருக்கிறது. ஒரே நம்பிக்கையாக ஃபார்மில் இருக்கும் அர்ஷ்தீப் சிங் மட்டுமே விளங்குகிறார்.

இந்த சூழலில் பும்ரா இல்லாதது பின்னடைவாக இருந்தாலும், அணியில் உலகத்தரம் வாய்ந்த முகமது ஷமி இந்தியாவை முன்னின்று வழிநடத்துவார் என முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் லட்சுமிபதி பாலாஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பும்ரா வருவதற்கு முன்பே ஷமிதான் சிறந்த பவுலர்..

பும்ரா இல்லாமல் இந்திய அணியின் பந்துவீச்சு கவலை அளிப்பதாக பலதரப்பினர் கூறிவரும் நிலையில், பும்ரா வருவதற்கு முன்பே இந்தியாவின் பந்துவீச்சை தலைமை தாங்கியவர் ஷமி என முகமது ஷமியின் முக்கியத்துவத்தை பாலாஜி எடுத்துரைத்துள்ளார்.

இந்தியாவின் பவுலிங்கில் ஷமியின் முக்கியத்துவம் குறித்து பேசியிருக்கும் பாலாஜி, ”பும்ரா அனைத்து வடிவங்களிலும் சாம்பியன் பந்துவீச்சாளர், ஆனால் பும்ரா வருவதற்கு முன்பே இந்தியாவின் பந்துவீச்சு தாக்குதலை முழுவதும் சுமந்தவர் ஷமி தான். அவர் 2019 ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் கடந்த 2023 உலகக் கோப்பை என இரண்டிலும் பும்ராவை விட சிறப்பாக செயல்பட்டார். ஷமிக்கு அனுபவம் உள்ளது, இந்தியா சிறப்பாக செயல்பட வேண்டுமானால், ஷமி சிறந்த பந்துவீச்சை எடுத்துவர வேண்டுவது அவசியம்” என கூறியுள்ளார்.

ஷமி

மேலும், “ஷமி சிறப்பாக செயல்படுவது மிகவும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன். அவர் புதிய பந்தில் தன்னுடைய சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்த வேண்டும். புதிய பந்தில் தனது முதல் ஆறு ஓவர்களில் அவர் ஏற்படுத்தக்கூடிய தாக்கம், இந்தியாவுக்கு மிகப்பெரிய பலமாக அமையும். அவரால் மட்டுமே இந்தியாவுக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளிக்க முடியும்” என கூறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் மேற்கோள் காட்டியுள்ளது.