பாபர் அசாம்
பாபர் அசாம் Twitter
கிரிக்கெட்

ஃபகர் ஜமன் 30 ஓவர்கள் வரை நின்றுவிட்டால் அரையிறுதிக்கு சென்றுவிடுவோம்! - பாபர் அசாம்

Rishan Vengai

நடப்பு 2023 உலகக்கோப்பையானது பரபரப்பான இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா 3 அணிகளும் அரையிறுதிக்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில், 4வது இடத்திற்காக நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மல்லுக்கட்டி வருகின்றன.

pakistan

இந்நிலையில் நேற்று நடந்த முக்கியமான போட்டியில் இலங்கை அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி, பாகிஸ்தானின் அரையிறுதி கனவில் பெரிய கல்லை எறிந்துள்ளது.

புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்திலிருக்கும் நியூசிலாந்தை பின்னுக்குதள்ளி பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமானால், கடைசி லீக் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 287 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும். ஒரு கடினமான இலக்கை நோக்கி களமிறங்கவிருக்கும் பாகிஸ்தான் அணி, தகுந்த திட்டமிடலோடு செல்லும் என பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நல்ல NRR பெறுவதற்கான அனைத்தையும் செய்வோம்! - பாபர் அசாம்

பாகிஸ்தானுக்கு இருக்கும் கடினமான அரையிறுதி வாய்ப்பு குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசியிருக்கும் பாபர் அசாம், “ இது ஒரு கடினமான விசயமாக இருந்தாலும் நாங்கள் எங்கள் இலக்கை நோக்கி தன்னம்பிக்கையுடன் செல்லவிருக்கிறோம். நேராக சென்று கிடைக்கிற பந்தையெல்லாம் அடித்து துவம்சம் செய்வதுபோல் இல்லை, இங்கிலாந்துக்கு எதிராக நாங்கள் ஒரு திட்டத்தோடு செல்லவிருக்கிறோம். முதல் 10 ஓவர்கள் மற்றும் அடுத்த 20 ஓவர்கள் எப்படி விளையாட வேண்டும், எந்தளவு ரன்களை எடுத்துவர வேண்டும் என்கிற திட்டமிடல் இருக்கிறது. அதற்கு தேவையான பார்ட்னர்ஷிப்களும், களத்தில் ஒவ்வொரு வீரர்களின் இலக்கு என்ன, எந்த வீரர் கடைசிவரை நின்று விளையாட வேண்டும் என்பதையும் திட்டமிட்டுள்ளோம்.

யார் ஆடப்போகிறார்கள் என என்னை கேட்டால், நான் ஃபகர் ஜமனை கூறுவேன். ஒருவேளை ஃபகர் ஜமன் 20-30 ஓவர்கள் வரை களத்தில் நின்றுவிட்டால், நாங்கள் நினைத்ததை செய்துவிடுவோம். பின்னர் இறுதியில் வரும் ரிஸ்வான் மற்றும் இஃப்திகார் இருவரும் மீதமுள்ளவற்றை பார்த்துக்கொள்வார்கள். என்ன செய்யவேண்டும், எப்படி செய்யவேண்டும் என்பதை நாங்கள் திட்டமிட்டு செல்வோம்” என பாபர் அசாம் கூறியுள்ளார்.