PSL தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பெஷாவர் சல்மி, குறைந்த இலக்கை துரத்தியும் கடைசி பந்தியில் தான் வெற்றி பெற்றது. 116 ஸ்ட்ரைக்ரேட்டில் 46 ரன்கள் எடுத்த பாபர், கோலியுடன் ஒப்பிட்டு கேள்வி கேட்ட நிருபரிடம், இத்தகைய ஒப்பீடுகளை நிறுத்தி முன்னேற வேண்டும் என எச்சரித்தார். சமீபத்தில் அவரது ஸ்ட்ரைக்ரேட், பவுண்டரி விகிதம் குறைவாகவே உள்ளது.
கடந்த மார்ச் 26ஆம் தேதி முதல் தொடங்கிய பாகிஸ்தான் சூப்பர் லீக் பரபரப்பாக நடந்துவருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பெஷாவர் சல்மி அணி ஹைதராபாத் கிங்ஸ்மேன் அணியை எதிர்கொண்டு விளையாடியது.
முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ்மேன் அணி 145 ரன்களை மட்டுமே அடித்தபோதிலும், பாபர் அசாமின் சல்மி அணி இலக்கை எட்ட கடைசிபந்து வரை திணறியது. 37 பந்துக்கு 116 ஸ்ட்ரைக்ரேட்டுடன் 46 ரன்கள் அடித்த பாபர் அசாமால் இறுதிவரை நிலைத்துநின்று ஆட்டத்தை முடித்துக்கொடுக்க முடியவில்லை. மாறாக அவரின் அணியால் கடைசி பந்தில் தான் வெற்றியை பெற முடிந்தது.
இந்தசூழலில் தான் போட்டிக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் பாபர் அசாமை விராட் கோலியுடன் ஒப்பிட்ட செய்தியாளர், உங்களால் ஏன் கோலியை போல ஆட்டத்தை முடித்துக் கொடுக்க முடியவில்லை என்ற கேள்வியை எழுப்பினார்.
போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் ஊடகங்களிடம் பேசிய பாபர் அசாமிடம், ஒரு செய்தியாளர் “விராட் கோலியும் உங்களைப் போன்றே ஷாட் அடிக்கும் திறமை கொண்டவர், ஆனால் அவரால் போட்டியை வெற்றிகரமாக முடிக்க முடிகிறது, உங்களால் முடியவில்லை. மக்கள் அவரை உங்களுடன் ஒப்பிடுகிறார்கள். இந்த ஒப்பீடு குறித்து உங்கள் கருத்து என்ன?" என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த பாபர் அசாம், "இவற்றை இங்கேயே முடித்துவிடுங்கள். இது போன்ற கருத்துகளை உங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்ளுங்கள். ஒப்பீடுகளை நிறுத்திவிட்டு முன்னேறுங்கள். நான் போட்டிகளை முடித்துக் கொடுக்கவில்லை என்பது உங்களுடைய தவறான புரிதல்" என பதிலளித்தார்.
ஆனால் பாபர் அசாமின் ஸ்ட்ரைக்ரேட் மற்றும் பவுண்டரி அடிக்கும் விகிதம் மந்தமாகவே பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் இருந்துவருகிறது. கடந்த 2 போட்டிகளில் 82 ரன்களை அடித்திருக்கும் அவர் சொற்பமான பவுண்டரிகளையே அடித்துள்ளார். மேலும் அவருடைய பேட்டிங் சராசரி சுமாராகவே இருந்துவருகிறது.