Babar Azam
Babar Azam Twitter
கிரிக்கெட்

ட்ரெஸ்ஸிங் ரூமில் ஏற்பட்ட வாக்குவாதம்! வீரர்களிடம் சொல்லாமல் இலங்கையை விட்டு வெளியேறிய பாபர் அசாம்!

Rishan Vengai

நடப்பு ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இலங்கையிடம் ஏற்பட்ட தோல்வியால் பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது. எதிர்வரும் உலகக்கோப்பையை வெல்லும் அணியாக பார்க்கப்படும் பாகிஸ்தான் அணியின் இந்த தோல்வி, அந்த அணியின் சமநிலையை பாதித்துள்ளது.

ஏற்கெனவே நசீம் ஷா, ஹாரிஸ் ராஃப், இமாம் உல் ஹக் என முக்கியமான வீரர்கள் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இருக்கும் வீரர்கள் சரியாக செயல்படாதது கேப்டன் பாபர் அசாமின் மனநிலையை பாதித்துள்ளது.

இந்நிலையில் போட்டிக்கு பிறகு, டிரஸ்ஸிங் ரூமில் இருந்த சக வீரர்களுடன் பாபர் அசாம் கோவமாக பேசியதாக கூறப்படுகிறது. போல் நியூஸ் வெளியிட்டிருக்கும் செய்தியின் படி, சில வீரர்களின் செயல்பாட்டில் பாபர் மிகவும் கோபமடைந்தார், அதுவே தேவையற்ற சம்பவங்களுக்கு வழிவகுத்தது. 28 வயதான அவர் போட்டிக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பின்போது சிரித்துக் கொண்டிருந்தார். ஆனால் ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு சென்ற பிறகு பாபர் தனது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார். அப்போது வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடியுடன் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ட்ரெஸ்ஸிங் ரூமில் ஏற்பட்ட வாக்குவாதம்! வீரர்களிடம் சொல்லாமல் நாடு திரும்பிய பாபர் அசாம்!

வாக்குவாதத்தில் “பாபர் அசாம் வீரர்கள் யாரும் பொறுப்பாக விளையாடவில்லை என சாடியுள்ளார். அப்போது குறுக்கிட்ட ஷாஹீன் அப்ரிடி சிறப்பாக விளையாடிய வீரர்களையாவது பாராட்டலாமே எனக் கூறியுள்ளார். ஆனால் அதற்கு கோபமடைந்த பாபர் அசாம் நான் கேப்டன்.. யார் நன்றாக விளையாடினார்கள் என்று எனக்கு தெரியும் என்று கூற வாக்குவாதம் பெருசாகியுள்ளது. பின்னர் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் தலையிட்டு விஷயங்களை அமைதிப்படுத்தியதாக” லோக்கல் சேனல்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

Babar Azam

இந்நிலையில் இந்த பூகம்பம் முடிவதற்குள் பாபர் அசாம் சக வீரர்களிடம் சொல்லாமலேயே இலங்கையை விட்டு வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகக்கோப்பைக்கு இன்னும் 18 நாட்களே இருக்கும் நிலையில், ஒருநாள் தரவரிசையில் நம்பர் 1 அணியாக இருக்கும் பாகிஸ்தான் அணிக்கு இது சரியான விசயம் இல்லை. அவர்கள் உலகக்கோப்பையை வெல்லக்கூடிய ஒரு அணியாக பார்க்கப்படுகின்றனர். ஆசியக் கோப்பைக்கு பிறகு வேறு எந்த தொடரும் பாகிஸ்தான் அணிக்கு இல்லை. அவர்கள் நேராக உலகக்கோப்பை பயிற்சி ஆட்டங்களில் மட்டுமே விளையாடவிருக்கின்றனர். இந்த நிலையில் வீரர்கள் ஒற்றுமையுடன் இருப்பது அவசியமான ஒன்றாகும்.

Babar Azam

இதுகுறித்து பேசியிருக்கும் முன்னாள் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் மொயின் கான், “உலகக் கோப்பைக்கு முன் நீங்கள் இதுபோன்ற விசயங்களை சரிசெய்ய வேண்டும். வேறுபாடுகள் இருந்தால், பெரிய நிகழ்வுக்கு முன் அதை சரிசெய்யும்போது அதுவே அணியை இன்னும் வலுவானதாக ஒன்றிணைக்க உதவும். ஆனால், ட்ரஸ்ஸிங் ரூம்மில் நடக்கும் வாதங்கள் இதுபோன்று ஊடகங்களில் வெளிவருவது அணிக்கு நல்லதல்ல. வீரர்களுடன் பாபருக்கு சிக்கல் இருந்தால் அதை சரிசெய்ய சரியான முறையில் ஒரு கேப்டன் செயல்பட வேண்டும். இதுபோன்ற பிரச்னைகளின்போது தலைமை பயிற்சியாளர் அல்லது சப்போர்டிங் ஸ்டாஃப்ஸ் உடனிருப்பது அவசியமான ஒன்று” என்று ஜியோ டிவியில் கூறியுள்ளார்.