விராட் - ரோகித் - பாபர்
விராட் - ரோகித் - பாபர் PT
கிரிக்கெட்

கோலி-ரோகித்தை முறியடிக்க 500 ரன்கள் மட்டுமே மீதம்! டி20-ல் புதிய சாதனை படைத்த பாபர்!

Rishan Vengai

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. டி20 உலகக்கோப்பைக்கு முன் முக்கியமான தொடர் என்பதால் இரண்டு அணிகளும் முழு பலத்துடன் களமிறங்கியுள்ளன. நியூசிலாந்து அணியில் வில்லியம்சனும், பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், ஹரிஸ் ராஃப், ஷாகீன் அப்ரிடி என அனைவரும் பங்கேற்ற முதலாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது.

babar azam

ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, டேரில் மிட்செல்லின் 27 பந்தில் 61 ரன்கள் என்ற அதிரடியான ஆட்டத்தால் 226 ரன்களை குவித்தது. தொடர்ந்து 2வது பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை விழுந்தாலும், பாபர் அசாமின் அசத்தலான ஆட்டத்தால் 17வது ஓவர் வரை ஆட்டத்தில் உயிர்ப்புடன் இருந்தது. 35 பந்துகளை எதிர்கொண்ட பாபர் அசாம், 6 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என பறக்கவிட்டு 57 ரன்களுடன் களத்தில் நிலைத்து நின்றார். பாகிஸ்தான் அணி 16.2 ஓவரில் 173 ரன்கள் இருந்த நிலையில் பாபர் அசாம் அவுட்டாகி வெளியேறினார். அதற்கு பிறகு தாக்குப்பிடிக்க முடியாத பாகிஸ்தான் அணி 180 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.

மார்டின் கப்டில் சாதனையை முறியடித்த பாபர் அசாம்!

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 57 ரன்களை பதிவுசெய்த பாபர் அசாம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை பதிவுசெய்த வீரர்கள் பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதிக டி20 ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் மார்டின் கப்டில் சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார். முதலிரண்டு இடத்தில் இருக்கும் விராட் கோலி மற்றும் ரோகித்சர்மாவின் சாதனையை முறியடிக்க பாபர் அசாமிற்கு இன்னும் 500 ரன்கள் மட்டுமே தேவையாக இருக்கிறது.

babar azam

அதிக T20I ரன்கள் குவித்தவர்கள்,

* விராட் கோலி - இந்தியா - 4008 ரன்கள் (115 போட்டிகள்)

* ரோகித் சர்மா - இந்தியா - 3853 ரன்கள் (149 போட்டிகள்)

* பாபர் அசாம் - பாகிஸ்தான் - 3542 ரன்கள் (105 போட்டிகள்)

* மார்ட்டின் குப்டில் - நியூசிலாந்து - 3531 ரன்கள் (122 போட்டிகள்)

* பால் ஸ்டிர்லிங் - அயர்லாந்து - 3428 ரன்கள் (134 போட்டிகள்)