Zampa - Klaasen
Zampa - Klaasen Twitter
கிரிக்கெட்

SA v AUS : 13 சிக்சர்கள் விளாசி 174 ரன்கள் குவித்த க்ளாசன்! 10 ஓவரில் 113 ரன்கள் கொடுத்த ஷாம்பா!

Rishan Vengai

2023 ஒருநாள் உலகக்கோப்பை நெருங்கிவரும் நிலையில் அனைத்து உலகநாடு அணிகளும் சர்வதேச ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகின்றனர். அந்தவகையில் தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரில் 3-0 என வெற்றிபெற்ற ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணிலேயே வைத்து தென்னாப்பிரிக்க அணியை ஓயிட்வாஸ் செய்தது.

இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடந்துவருகிறது. முதலிரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்ற நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டியில் கம்பேக் கொடுத்த தென்னாப்பிரிக்கா தொடரை 2-1 என மாற்றியது. இந்நிலையில், 4வது ஒருநாள் போட்டி இன்று செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.

13 சிக்சர்கள் 13 பவுண்டரிகள் விளாசி 174 ரன்கள் குவித்த க்ளாசன்!

தொடரை தக்கவைத்துக்கொள்ள வெற்றிபெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங்கை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்தது தென்னாப்பிரிக்கா. டி காக் மற்றும் ஹென்ரிக்ஸ் இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்து முதல் விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்தனர். பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தாலும் தென்னாப்பிரிக்கா நல்ல ரன்களையே அடித்திருந்தது.

Miller - Klaasen

25 ஓவர் முடிவில் 120 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்த நிலையில் 4வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த வாண்டர் டஸ்ஸன் மற்றும் க்ளாசன் இருவரும் அணியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்றனர். 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட இந்த ஜோடியை வாண்டர் டஸ்ஸனை 62 ரன்களில் வெளியேற்றி அசத்தினார் ஹெசல்வுட். ஆனால் 5வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த மில்லர் மற்றும் க்ளாசன் இருவரும் எதற்காக 4வது விக்கெட்டை எடுத்தோம் என ஆஸ்திரேலியாவை புலம்ப வைத்தனர். அதிரடிக்கு பெயர் போன இருவரும் என்ன நினைத்தார்களோ வெளுத்து வாங்குறோம் என சரவடிக்கு திரும்பினர்.

Klaasen

க்ளாசன் பவுண்டரிகளை அடிக்க மில்லரோ சிக்சர்களாக பறக்கவிட்டார். மில்லர் சிக்சர்கள் அடிக்க நீ மட்டும் தான் அடிப்பயா என்பது போல் ருத்ர தாண்டவமே ஆடினார் க்ளாசன். 13 பவுண்டரிகள் 13 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டிய க்ளாசன் வெறும் 83 பந்துகளிலேயே 174 ரன்களை குவித்து அசத்தினார். மறுபுறம் அதிரடியை நிறுத்தாத மில்லர் 45 பந்துகளில் 6 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் என பறக்கவிட்டு 82 ரன்கள் சேர்த்தார். க்ளாசன் மற்றும் மில்லர் அதிரடியால் 50 ஓவர் முடிவில் 416 ரன்களை குவித்தது தென்னாப்பிரிக்கா அணி.

10 ஓவர்களில் 113 ரன்கள் கொடுத்து மோசமான சாதனையில் இணைந்த ஆடம் ஷாம்பா!

கடைசி 18 ஓவர்களில் ருத்ரதாண்டவம் ஆடிய க்ளாசன்-மில்லர் ஜோடி 259 ரன்கள் குவித்தது. ஹசல்வுட், ஸ்டொய்னிஸ், ஷாம்பா என யார் பந்துபோட்டாலும் ஒவ்வொரு ஓவரில் 15-20 ரன்களுக்கு குறைவில்லாமல் ரன்கள் வந்தது. ஆடம் ஷாம்பா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 3 சிக்சர்கள், 1 பவுண்டரிகளை பறக்கவிட்ட க்ளாசன் 26 ரன்களை அடித்தார்.

10 ஓவரில் 113 ரன்களை விட்டுக்கொடுத்த ஆடம் ஷாம்பா ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பவுலர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார். ஏற்கனவே இதே மோசமான சாதனையை ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரரான மிக் லெவிஸ் 2006ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் விட்டுக்கொடுத்தார். உலக சாதனை படைத்த சேஸிங்கில் இந்த மோசமான சாதனையை அவர் படைத்திருந்தார். அவருக்கு பிறகு தற்போது ஷாம்பா இந்த மோசமான சாதனையை தன்னுடைய பெயரிலும் சேர்த்துள்ளார்.

இந்த மோசமான பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் ஆண்ட்ரூ டை, 2018-ல் இங்கிலாந்துக்கு எதிராக நாட்டிங்ஹாமில் 100 ரன்களை விட்டுக்கொடுத்தார். 417 ரன்கள் என்ற இலக்கை சேஸ் செய்த ஆஸ்திரேலியா அணி 34.5 ஓவர்களில் 252 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தனி ஆளாக போராடி அலெக்ஸ் கேரி 99 ரன்கள் எடுத்த நிலையில் சதத்தை நழுவவிட்டார். தென்னாப்ரிக்க அணி 164 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 174 ரன்கள் விளாசிய கால்சன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.