மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரானது இந்தியா மற்றும் இலங்கையில் வரும் செப்டம்பர் 30-ம் தேதிமுதல் தொடங்கி நடைபெறவிருக்கிறது.
அதற்கு முன்னதாக இந்தியாவிற்கு வந்திருக்கும் ஆஸ்திரேலியா மகளிர் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா நிர்ணயித்த 282 ரன்கள் இலக்கை 44.1 ஓவரில் சேஸ் செய்த ஆஸ்திரேலியா வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் கம்பேக் கொடுத்த இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்தது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், தொடக்க வீரராக களமிறங்கி 14 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிரிதி மந்தனா 117 ரன்கள் குவித்து அசத்தினார். இது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அவருடைய 12வது சதமாகவும், ஒட்டுமொத்தமாக 15-வது சதமாகவும் பதிவுசெய்யப்பட்டது.
15 சர்வதேச சதங்களை பதிவுசெய்த முதல் ஆசிய வீராங்கனை என்ற சாதனையை மந்தனா படைக்க, தொடர்ந்து வந்த வீராங்கனைகள் 292 ரன்கள் என்ற நல்ல டோட்டலுக்கு இந்தியாவை அழைத்துச்சென்றனர். 9வது வீராங்கனையாக களமிறங்கிய ஸ்னே ரானா அதிரடியாக 24 ரன்கள் அடித்து உதவினார்.
293 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி விளையாடிவரும் ஆஸ்திரேலியா அணி 62 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 4வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த பெர்ரி மற்றும் சதர்லேண்ட் இருவரும் போராடினாலும் 44, 45 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினர். அதற்குபிறகு வந்த வீரர்கள் போராடினாலும் 190 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட்டாகி 102 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
1973-க்கு பிறகு ஆஸ்திரேலியா மகளிர் மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் தோற்பது இதுவே முதல்முறை, அதவாது இதுவரை ஆஸ்திரேலியா 100 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதே கிடையாது. இந்திய அணி முதல் போட்டியில் தோற்றதற்கு தரமான பதிலடியை கொடுத்துள்ளது.