ஐசிசி மினி உலகக்கோப்பை என கூறப்படும் சாம்பியன்ஸ் டிரோபி ஒருநாள் தொடரானது பிப்ரவரி 19 முதல் தொடங்கி பரபரப்பாக நடந்துவருகிறது.
முதல் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில், நியூசிலாந்து, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் வெற்றியை பதிவுசெய்துள்ளன.
இந்நிலையில் இன்று நடைபெறும் 4வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இரண்டு அணிகளும் கடைசியில் விளையாடிய ஒருநாள் தொடரில் தோல்வியடைந்த கையோடு சாம்பியன்ஸ் டிராபியில் களமிறங்குகின்றன.
இங்கிலாந்து அணி நல்ல திறமையான வீரர்கள் இருந்தும் மோசமாக பேட்டிங் செய்துவருகிறது. பந்துவீச்சில் ஆக்ரோசமான அணுகுமுறையை வெளிப்படுத்த முடியாமல் பவுலர்கள் தடுமாறி வருகின்றனர். நட்சத்திர பவுலர் ஆர்ச்சர் காயத்திலிருந்து மீண்டுவந்து ரிதமை பிடிக்கமுடியாமல் இருப்பதை பின்னடைவாக இருக்கிறது.
ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரையில் மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், மிட்செல் மார்ஸ், மார்கஸ் ஸ்டொய்னிஸ், ஹசல்வுட் என நட்சத்திர வீரர்கள் பட்டாளமே சாம்பியன்ஸ் டிராபியை தவறவிட்டுள்ளது.
இந்த சூழலில் பேட்டிங்கில் ஃபார்மில் இருக்கும் டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் இருவர் மட்டுமே வழிநடத்தவிருக்கின்றனர். பந்துவீச்சில் அனுபவமின்மை அதிகமாகவே இருக்கிறது. டி20 ஃபார்மேட்டில் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்திய ஸ்பென்சர் ஜான்சன், ஒருநாள் போட்டியில் அதே சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்துவாரா என்ற கேள்வி எழுகிறது.
இரண்டு அணிகளிடமுமே பலம், பலவீனம் சமமாக இருக்கிறது. எந்த அணி போட்டியில் சிறப்பாக செயல்படுகிறதோ அவ்வணி வெற்றியை ருசிக்கும்.
சாம்பியன்ஸ் டிராபியில் இவ்விரண்டு அணிகளும் 5 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இங்கிலாந்து அணி 3-2 என லீடிங்கில் உள்ளது.