Ind vs Aus - U19
Ind vs Aus - U19 ICC
கிரிக்கெட்

U19 WC பைனல்: 6-வது முறை கோப்பை வெல்லுமா இந்தியா? வெற்றி இலக்காக 254 ரன்கள் நிர்ணயித்த ஆஸி!

Rishan Vengai

தென்னாப்பிரிக்காவில் நடந்துவரும் 2024 யு19 உலகக்கோப்பை தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, பங்களாதேஷ், அயர்லாந்து, அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, தென்னாப்ரிக்கா, மேற்கிந்திய தீவுகள், ஆஸ்திரேலியா, நமீபியா, இலங்கை, ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான், நேபாளம், நியூசிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட 16 அணிகள் உலகக்கோப்பைக்காக மோதிய மோதலில், சிறப்பாக செயல்பட்ட இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா முதலிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன.

2 விக்கெட்டில் வெற்றி! 1 விக்கெட்டில் வெற்றி!

இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான முதல் அரையிறுதிப்போட்டி இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே கடந்த செவ்வாய் கிழமை நடைபெற்றது. விறுவிறுப்பான இந்தப் போட்டியில் இறுதிவரை போராடிய இந்திய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக சென்றது.

இரண்டாவது அரையிறுதிப்போட்டியானது பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தென்னாப்பிரிக்காவின் பெனோனி, வில்லோமூர் பார்க்கில் நடைபெற்றது. அதில் பாகிஸ்தான் கையில் இருந்த வெற்றியை தட்டிப்பறித்த ஆஸ்திரேலியா அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று இரண்டாவது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில் உலகக்கோப்பையை வெல்லும் இறுதிப்போட்டியானது இன்று ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே நடந்துவருகிறது.

253 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா!

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. நல்ல டோட்டலை போர்டில் போட்டு இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க நினைத்த ஆஸ்திரேலியா அணிக்கு, தொடக்க வீரர் சாம் கான்ஸ்டஸை 0 ரன்னில் வெளியேற்றிய லிம்பனி அதிர்ச்சி கொடுத்தார்.

U19 ind vs aus

முதல் விக்கெட்டை விரைவாகவே இழந்த போதிலும் அடுத்து கைக்கோர்த்த கேப்டன் ஹக் வெய்ப்ஜென் மற்றும் ஹாரி டிக்சன் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை நெருங்கிய இந்த கூட்டணியை வெய்ப்ஜெனை 48 ரன்னிலும், ஹாரியை 42 ரன்னிலும் பிரித்துவைத்தார் நமன் திவாரி.

U19 ind vs aus

நிலைத்து நின்ற இரண்டு வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறினாலும், மிடில் ஆர்டர் வீரர்களாக களமிறங்கிய ஹர்ஜாஸ் சிங் மற்றும் ஒலிவர் பீக் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஹர்ஜாஸ் சிங் 55 ரன்களும், ஒலிவர் 46 ரன்களும் அடிக்க 50 ஓவர் முடிவில் 253 ரன்களை எடுத்துள்ளது ஆஸ்திரேலியா அணி.

U19 ind vs aus

5 யு19 உலகக்கோப்பைகளை வென்றிருக்கும் இந்திய அணிக்கு 6வது கோப்பையை வெல்ல 254 ரன்கள் தேவைப்படுகிறது. எடுக்குமா? பார்ப்போம்...