இந்தியா - ஆஸ்திரேலியா pt
கிரிக்கெட்

CT 2025 | ஸ்மித், கேரி அசத்தல் ஆட்டம்.. இழுத்துப்பிடித்த ஸ்பின்னர்கள்! IND-க்கு 264 ரன்கள் இலக்கு

2025 சாம்பியன்ஸ் டிராபியின் முதல் அரையிறுதியில் இந்தியாவுக்கு 265 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா அணி.

Rishan Vengai

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரானது பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பிப்ரவரி 19-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவரும் தொடரில் ‘இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான்’ என 8 அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தின.

தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய இந்தியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்று அசத்தியுள்ளன.

ind vs aus

இந்நிலையில் முதல் அரையிறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் துபாயில் விளையாடிவருகின்றன.

264 ரன்களை அடித்த ஆஸ்திரேலியா..

2011 ஒருநாள் உலகக்கோப்பைக்கு பிறகு ஆஸ்திரேலியா அணியை ஐசிசி தொடரின் நாக்அவுட் போட்டிகளில் இந்திய அணி வீழ்த்தியதேயில்லை. கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக நாக் அவுட் போட்டிகளில் இந்திய அணிக்கு தோல்வியையே ஆஸ்திரேலியா பரிசளித்துவருகிறது. அதில் 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் இறுதிப்போட்டியில் சொந்தமண்ணில் படுதோல்வியை சந்தித்தது இந்தியா.

2023 odi wc india loss

இந்த சூழலில் ஆஸ்திரேலியாவை இந்தமுறை இந்தியா பழிதீர்த்து இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்ப்பார்ப்பில் முதல் அரையிறுதிப்போட்டி துபாயில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது.

இந்தியா ஆஸ்திரேலியா

தொடக்க வீரராக வந்த இளம் வீரர் கூப்பரை 0 ரன்னில் ஷமி வெளியேற்ற இந்திய அணி சிறந்த தொடக்கத்தை பெற்றது. ஆனால் மறுமுனையில் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என வெளுத்துவாங்கிய டிராவிஸ் ஹெட் அச்சுறுத்தும் பேட்டிங்கை வெளிப்படுத்தினார். 9வது ஓவரை வீசவந்த வருண் சக்கரவர்த்தி டிராவிஸ் ஹெட்டை முதல் பந்திலேயே வெளியேற்றி அசத்தினார்.

2 விக்கெட்டுகள் சரிந்தாலும் 3வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் லபுசனே இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அசத்த, 29 ரன்னில் லபுசனேவை வெளியேற்றிய ஜடேஜா, அடுத்துவந்த ஜோஸ் இங்கிலீஸையும் 11 ரன்னில் அவுட்டாக்கி மிரட்டிவிட்டார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் இந்திய பவுலர்களை செட்டிலாக விடாத கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 4 பவுண்டரிகள் 1 சிக்சர் என விரட்டிக்கொண்டே இருக்க, ஆஸ்திரேலியா 5 ரன்ரேட்டுக்கு கீழே செல்லாமல் சிறப்பாகவே செயல்பட்டது. ஆனால் 73 ரன்னில் ஸ்மித்தை ஷமி வெளியேற்ற, அடுத்துவந்த மேக்ஸ்வெல்லின் ஸ்டம்பை தகர்த்தெறிந்தார் அக்சர் பட்டேல்.

அவ்வளவு தான் ஆஸ்திரேலியாவை 220 ரன்களுக்கு சுருட்டிவிடலாம் என நினைத்தபோது, இறுதிவரை தனியொரு ஆளாக நிலைத்து நின்று 8 பவுண்டரிகள் 1 சிக்சர் என பறக்கவிட்ட அலெக்ஸ் கேரி 61 ரன்கள் அடித்து அசத்தினார். அலெக்ஸ் கேரியின் கடைசிநேர ஆட்டத்தால் 49.3 ஓவரில் 264 ரன்களை எடுத்து ஆல்அவுட்டானது ஆஸ்திரேலியா.

அலெக்ஸ் கேரி

2025 சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டிக்கு செல்ல இந்திய அணி 265 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடவுள்ளது.