ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரரான உஸ்மான் கவாஜா, சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரரான உஸ்மான் கவாஜா, இதுவரை ஆஸ்திரேலியா அணிக்காக 87 டெஸ்ட், 40 ஒருநாள் மற்றும் ஒன்பது டி20 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 8,001 ரன்கள் எடுத்துள்ளார். 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வென்ற ஆஸ்திரேலியா அணியில் முக்கிய வீரராக ஜொலித்த கவாஜா, கடந்த 2 ஆண்டுகளாக தன்னுடைய ஃபார்மை நிரூபிக்க முடியாமல் போராடி வருகிறார். கடைசி இரண்டு ஆண்டுகளில் அவருடைய டெஸ்ட் பேட்டிங் சராசரி 25.93 மற்றும் 36.11 என சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கவனம் ஈர்க்கவில்லை.
2025ஆம் ஆண்டில் அவரிடமிருந்து ஒரு அரைசதம் மற்றும் ஒரு சதம் மட்டுமே வந்துள்ளது. நடந்துவரும் ஆஷஸ் தொடரில் கூட 5 இன்னிங்ஸ்களில் வெறும் 153 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இந்தச் சூழலில், ”ஆஷஸ் தொடரில் 5ஆவது டெஸ்ட்டில் கவாஜா ஓய்வை அறிவிக்க வேண்டும். அவரது சொந்த மண்ணான சிட்னியில் ஓய்வு அறிவிப்பது சிறந்த முடிவு” என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், உஸ்மான் கவாஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், ”சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளேன். சிட்னி டெஸ்ட்தான் எனது கடைசி டெஸ்ட்” என தெரிவித்தார்.
பாகிஸ்தானில் பிறந்த கவாஜா, ஆஸ்திரேலியாவுக்காக விளையாடிய முதல் முஸ்லிம் வீரர் ஆனார். கவாஜாவுக்கு ஐந்து வயதாக இருந்தபோது அவரது குடும்பம் பாகிஸ்தானிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தது. கவாஜா ஆறு ஆஷஸ் தொடர்களில் விளையாடியுள்ளார். இதில் இரண்டில் வெற்றி, இரண்டில் தோல்வி மற்றும் இரண்டில் டிரா. 2023இல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியிலும் அவர் ஒரு பகுதியாக இருந்தார்.
2011ஆம் ஆண்டு சிட்னியில் அறிமுகமாகியிருந்த அவர், அதே மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் இறுதிப் போட்டியில் தனது 88வது டெஸ்டில் கவாஜா விளையாட உள்ளார். இதுவே அவரது கடைசிப் போட்டியாகும். இந்தப் போட்டியில் அவர் 30 ரன்கள் எடுத்தால், ஆஸ்திரேலியாவின் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் மைக் ஹஸ்ஸியை முந்தி 14வது இடத்தைப் பிடிப்பார். 2023ஆம் ஆண்டு காஸா மக்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக பாகிஸ்தானுக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் முதல் டெஸ்டில் கருப்பு கைப்பட்டை அணிந்ததற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் அவர்மீது குற்றம்சாட்டப்பட்டது.