2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 27 வருட கோப்பை கனவை நோக்கி நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடினமாக சண்டையிட்டு வருகிறது தென்னாப்பிரிக்கா அணி.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி ஸ்டீவ் ஸ்மித் மற்றும் வெப்ஸ்டர் இருவரின் அரைசதத்தின் உதவியால் 212 ரன்கள் சேர்த்தது. அபாரமாக பந்துவீசிய ரபாடா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
அதற்குபிறகு முதல் இன்னிங்ஸில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி, ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸின் மிரட்டலான பந்துவீச்சால் 138 ரன்களுக்கே சுருண்டது. 6 விக்கெட்டுகளை கைப்பற்றி கம்மின்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் மைல்கல்லை எட்டினார்.
முதல் இன்னிங்ஸில் 74 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா அணி, எப்படியும் வலுவான இலக்கை நிர்ணயிக்கப்போகிறது என்ற எண்ணமே எல்லோருக்கும் இருந்தது. ஆனால் ’இருங்க பாய்’ மொமண்ட்டை எடுத்துவந்த தென்னாப்பிரிக்கா பவுலர் விக்கெட் வேட்டை நடத்திவருகின்றனர்.
ஒரே ஓவரில் 2 விக்கெட்டை வீழ்த்தி ரபாடா அசத்த, முதல் இன்னிங்ஸில் அரைசதங்கள் அடித்த ஸ்மித் மற்றும் வெப்ஸ்டர் இருவரையும் அவுட்டாக்கி மிரட்டினார் லுங்கி இங்கிடி. இருவரின் அபாரமான பந்துவீச்சால் 73 ரன்னுக்கே 7 விக்கெட்டுகளை இழந்து போராடிவருகிறது ஆஸ்திரேலியா.