aus vs sa - wtc final cricinfo
கிரிக்கெட்

WTC Final | ஆஸியை திணறடித்த ரபாடா! 67 ரன்னுக்குள் 4 விக்கெட் காலி; சரிவிலிருந்து அணியை மீட்ட ஸ்மித்!

2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.

Rishan Vengai

200 வருடங்களுக்கு முன்பே கிரிக்கெட் ஊன்றிய பழமையான கிரிக்கெட் அணியாக இருந்தாலும், கோப்பை என்பது தென்னாப்பிரிக்காவிற்கு இதுவரை எட்டாக்கனியாகவே இருந்துவருகிறது. கிரிக்கெட் வரலாற்றில் பல ஏற்ற இறக்கங்களை கொண்ட அணியாக தென்னாப்பிரிக்கா இருந்துவருகிறது. 20 வருடங்கள் தடைக்குபிறகு 1991-ல் சர்வதேச கிரிக்கெட் மறுமலர்ச்சியை பெற்ற தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி, 1998-ம் ஆண்டுநடைபெற்ற ஐசிசி நாக் அவுட் கோப்பை வென்றது. அதுதான் அவ்வணி வென்ற கடைசி மற்றும் ஒரே கோப்பையாக இன்றளவு நீடித்துவருகிறது.

தென்னாப்பிரிக்கா

1992, 2003, 2015 உலகக்கோப்பை நாக் அவுட் போட்டிகள் என 3 முறை தோற்ற தென்னாப்பிரிக்கா அணி, 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிவரை முன்னேறி இந்தியாவிடம் தோற்று கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது.

தென்னாப்பிரிக்கா

இந்த சூழலில் கோப்பை வெல்லாத 27 வருடங்கள் காத்திருப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில், 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு விளையாடுகிறது தென்னாப்பிரிக்கா.

67 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா..

2025 உலக டெஸ்ட் சாம்பியன் யார் என்ற கேள்விக்கு விடை கிடைக்கும் இறுதிப்போட்டியில் இன்று ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கிய போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீசிவருகிறது.

அதன்படி நல்ல ஸ்விங் கிடைக்கும் என்பதால் முதல் 3 ஓவர்களை மெய்டனாக விளையாடிய ஆஸ்திரேலியா வீரர்கள் நிதானமான தொடக்கத்தை கொடுத்தனர். ஆனால் ஆஸ்திரேலியாவிற்கு வில்லனாக வந்த ரபாடா ஒரே ஓவரில் கவாஜா மற்றும் காம்ரான் கிறீன் இருவரையும் அவுட்டாக்க 16 ரன்னுக்கே 2 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா.

அதற்குபிறகு ஆஸ்திரேலியாவை மீட்டு எடுத்துவர லபுசனே மற்றும் ஸ்டீவ் ஸ்மித் போராடிய நிலையில், இன் ஃபார்மில் இருந்துவரும் மார்கோ யான்சன் லபுசனேவை 17 ரன்னில் வெளியேற்றிய கையோடு டிராவிஸ் ஹெட்டை 11 ரன்னில் அவுட்டாக்கி அசத்தினார். 67 ரன்னுக்கே 4 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா, ஸ்டீவ் ஸ்மித்தின் நிதான பேட்டிங்கால் சரிவில் இருந்து மீண்டது. ஸ்மித் அரைசதம் கடந்து விக்கெட்டை இழக்காமல் தென்னாப்ரிக்காவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார். 40 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 65 ரன்களுடனும், வெப்ஸ்டெர் 34 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்த ஜோடி 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

இருப்பினும், மார்க்கரம் வீசிய 42 ஆவது ஓவரில் கேட்ச் கொடுத்து ஸ்மித் ஆட்டமிழந்தார். அவர் 112 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். தற்போது அலெக்ஸ் கேரி களமிறங்கியுள்ளார்.

WTC ஃபைனல் - 2 ஸ்டோரிகள்

தோல்வியே சந்திக்காத பவுமா - இதுவரை 9 போட்டிகளில் தென்னாப்பிரிக்கா அணியை வழிநடத்தியிருக்கும் டெம்பா பவுமா தோல்வியே காணாத கேப்டனாக வலம்வருகிறார். 8 போட்டிகளில் வெற்றியை பெற்ற டெம்பா தலைமையிலான தென்னாப்பிரிக்கா, 1 போட்டியை டிராவில் முடித்தது.

aus vs sa

தோல்வியே சந்திக்காத ஆஸ்திரேலியா - இதுவரை பொதுவான மைதானங்களில் மோதிய ஆஸ்திரேலியா - தென்னப்பிரிக்கா மோதலில் தோல்வியே காணாமல் 2-0 என முன்னிலை வகிக்கிறது ஆஸ்திரேலியா.