2025 ஆஷஸ் தொடரை வென்றது ஆஸ்திரேலியா cricinfo
கிரிக்கெட்

இனியும் பாஸ்பால் அவசியமா..? 16வது வருடமாக ENG தோல்வி.. ஆஷஸ் தொடரை வென்றது ஆஸ்திரேலியா!

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது ஆஸ்திரேலியா அணி.

Rishan Vengai

ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியின் பாஸ்பால் அணுகுமுறை தோல்வியடைந்தது. மிட்செல் ஸ்டார்க் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இங்கிலாந்து அணியின் பாஸ்பால் தேவையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆஷஸ் வரலாறு சுருக்கம்..

இந்தியா - பாகிஸ்தான், மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற RIVALARY மோதல்களுக்கு எல்லாம் முதன்மை என்றால், அது ஆஷஸ் தொடர்தான். உலகக்கோப்பையைவிட ஆஷஸ் தொடரை வெல்வதே முக்கியம் என இரு அணி வீரர்களும், இரு நாட்டு ரசிகர்களும் எண்ணும் அளவுக்கு, இந்தத் தொடர் கௌரவப் பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது. 1882-ஆம் ஆண்டு தொடங்கிய இந்த மோதல், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையென கடுகளவும் சுவாரஸ்யத்துக்குக் குறைவின்றி நடைபெற்று வருகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டெல்லாம் அழிஞ்சு போச்சு, இனிமே டி20 பார்மெட் கிரிக்கெட் என்று சொல்லிய பலரது வாயையும் அடைத்து வருவதுதான் ஆஷஸ் டெஸ்ட் தொடர். அதற்கு மைதானங்களில் குறைவில்லாமல் கூடும் கூட்டங்களே சாட்சி.

ஆஷஸ் வரலாற்றைச் சுருக்கமாகப் பார்த்தால், கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து அணி, 1882ஆம் ஆண்டு தனது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. இதனை தொடர்ந்து இங்கிலாந்து செய்தித் தாள், ’இங்கிலாந்து கிரிக்கெட் இறந்துவிட்டது, ஓவல் மைதானத்தில் புதைக்கப்பட்டு, அதன் சாம்பல் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்பட்டது’ என கூறியது. இதனால்தான் இந்த தொடருக்கு ’ஆஷஸ்’ என பெயரிடப்பட்டது.. அன்றிலிருந்து இன்றுவரை ஆஷஸ் தொடர் ஒரு மானப்பிரச்சினையாக இரு நாட்டுக்கும் மாறியுள்ளது. நூற்றாண்டுகளைக் கடந்துள்ள ஆஷஸ், தற்போது BAZBALL கோட்பாட்டுக்கும் - உலக டெஸ்ட் சாம்பியனுக்குமான மோதலாக அமைந்துள்ளது.

இதுவரை, மொத்தம் 73 ஆஷஸ் தொடர் நடைபெற்றுள்ள நிலையில், அதில் 34 தொடர்களை ஆஸ்திரேலியாவும், 32 தொடர்களை இங்கிலாந்தும் கைப்பற்றியுள்ளன. 7 தொடர்கள் டிராவில் முடிந்துள்ளன. இரு அணிகளுக்கும் இடையே 361 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் 152 போட்டிகளில் ஆஸ்திரேலியாவும், 110 போட்டிகளில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. 99 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.

பாஸ்பால் எப்படி பிறந்தது..?

2010ஆம் ஆண்டுக்கு பின் தற்போது வரை ஆஸ்திரேலியா மண்ணில் ஆஷஸ் கோப்பையை இங்கிலாந்து அணி வெல்லவில்லை. கடந்த 2022ஆம் ஆண்டு 4-0 என்ற கணக்கில் படுதோல்வியை தழுவிய நேரத்தில்தான் இங்கிலாந்து அணி பல்வேறு மாற்றங்களை செய்தது.. அப்போதுதான் நியூசிலாந்து அணியின் மெக்கல்லம் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டார், அதன் பின்தான் இங்கிலாந்து அணி ’BAZBALL’-ஐ விளையாட தொடங்கியது.

ஸ்டீவ் ஸ்மித் - பென் ஸ்டோக்ஸ்

சொல்லப்போனால் ஆஸ்திரேலியா மண்ணில் ஆஷஸ் தொடரை வெல்லவே BAZBALL ஐ இங்கிலாந்து கையில் எடுத்தது. இந்தசூழலில் தான் ஆஸ்திரேலியாவில் ஆஷஸ் தொடரை வெல்ல வேண்டும் என்ற ஒற்றை நோக்கில் கடந்த 4 ஆண்டுகளாக இங்கிலாந்து அணி பாஸ்பால் அட்டாக் அணுகுமுறையை விளையாடி வருகிறது.

15ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலியாவில் பாஸ்பால் அட்டாக்குடன் காலடி வைத்த பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி, கிளைமேக்ஸை மாற்றும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் தோல்வியையே தழுவி ஏமாற்றம் கொடுத்துள்ளது.

ஆஷஸ்தொடரை வென்றது ஆஸ்திரேலியா..

2025 ஆஷஸ் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் பாட் கம்மின்ஸ், ஹசல்வுட், நாதன் லயன் போன்ற நட்சத்திர பவுலர்கள் இல்லாத சூழலில், இங்கிலாந்து அணிக்கே வெற்றி நிச்சயம் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் முதலிரண்டு போட்டியிலும் தனியாளாக 18 விக்கெட்டுகளை சாய்த்த மிட்செல் ஸ்டார்க் இங்கிலாந்தின் பாஸ்பாலை ஆஸ்திரேலியாவிலேயே புதைத்தார்.

மிட்செல் ஸ்டார்க்

அடுத்தடுத்த 2 தோல்விகளுக்கு பிறகு 3வது டெஸ்ட் போட்டியானது அடிலய்டு மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி அலெக்ஸ் கேரியின் அதிரடியான சதத்தால் 371 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணியில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மட்டுமே 83 ரன்கள் குவித்து நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 286 ரன்கள் சேர்த்தது.

85 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்ஸில் 349 ரன்கள் குவித்தது. தொடக்கவீரரான டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி 170 ரன்கள் குவித்தார். 434 ரன்கள் அடித்தால் வெற்றி என இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து 352 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை சந்தித்தது.

5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் 3 போட்டிகள் முடிவில் 3-0 என வென்ற ஆஸ்திரேலியா அணி ஆஷஸ் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. எதற்காக இங்கிலாந்து அணியில் பாஸ்பால் தொடங்கப்பட்டதோ அதுவே நடக்காத நிலையில், இன்னும் பாஸ்பால் என்பது தேவையா என்ற விமர்சனத்தை ரசிகர்கள் எழுப்பியுள்ளனர்.