ஐபிஎல் தொடரில் சர்வதேச பவுலர்களின் பந்துவீச்சையே சிதறடித்ததன் மூலம் வைபவ் சூர்யவன்ஷி, இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். தவிர, ஐபில் தொடரிலும் அதிக ரன் குவித்த வீரரானார். இந்த நிலையில், அவருடைய திறமையை மதிப்பிட்டிருக்கும் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் கிரேக் சேப்பல், கிரிக்கெட்டை விமர்சித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக, 16 போட்டிகளில் 776 ரன்கள் குவித்து அதிக ரன் எடுத்தவருக்கான ஆரஞ்சு தொப்பியை வென்றவர், வைபவ் சூர்யவன்ஷி. 15 வயதே ஆன இவர், பீகாரைச் சேர்ந்தவர். ஐபிஎல் தொடருக்கு முன்பாக வைபவ் சூர்யவன்ஷி ஆட்டத்திறன் குறித்து பலரும் சந்தேகம் எழுப்பிய நிலையில், ஜஸ்பிரித் பும்ரா, பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் காகிசோ ரபாடா போன்ற உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களின் பந்துகளை கொஞ்சமும் பயமின்றி நாலாபுறமும் சிதறடித்ததுடன், விமர்சித்த வல்லுநர்களின் வாயையும் மூடவைத்தார். இப்படி ஐபிஎல் தொடரில் அவர் காட்டிய அதிரடியும் சரவெடியுமே அவரை அடுத்தநிலைக்கு கொண்டு சென்றது. ஆம், இங்கிலாந்து, அயர்லாந்து மற்றும் ஆசிய தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம்பெற்றுள்ளார்.
இதன்மூலம் இந்திய அணியில் இடம்பெற்ற மிக இளம் வயது வீரர் என்ற வரலாற்றுப் பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இந்த நிலையில், வைபவ் சூர்யவன்ஷியின் அபாரத் திறமையைக் கொண்டாடுவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், மிகச் சிறந்த பந்துவீச்சாளர்களை இந்தச் சிறுவன் மிக எளிதாகத் துவம்சம் செய்வது, கிரிக்கெட் விளையாட்டு சென்றுகொண்டிருக்கும் கவலைக்குரிய திசையை வெளிப்படுத்துகிறது என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் கிரெக் சேப்பல் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “நவீன காலத்து அதிரடித் தன்மையுடன் கூடிய ஒரு பாரம்பரியமான, தூய ஆட்டமுறை அவரிடம் வெளிப்படுகிறது; அவரது இந்த திறமை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஓர் அபூர்வமான பரிசு என்பதை நிரூபிக்கிறது. இருப்பினும், இவ்வளவு இளம் வயதில் அவர் அடைந்துள்ள இந்த அசாத்தியமான வெற்றி ஒரு தீவிரமான எச்சரிக்கை மணியாகவும் அமைகிறது. உடல் ரீதியாக முழுமையான வளர்ச்சி கூட அடையாத ஒரு 15 வயது சிறுவனால், சர்வதேச அரங்கில் உலகின் தலைசிறந்த பவுலர்களை மிக எளிதாக அவமானப்படுத்த முடிகிறது என்றால், அது இந்த விளையாட்டில் உள்ள பெரிய குறைபாட்டையே காட்டுகிறது.
தற்போதைய நவீன தொழில்நுட்பத்தால் வடிவமைக்கப்பட்ட பேட்கள், மிகச் சிறிய பவுண்டரி எல்லைகள் மற்றும் பவுலர்களுக்கு கொஞ்சமும் கைகொடுக்காத பேட்டிங்கிற்கு மட்டுமே சாதகமான தட்டையான ஆடுகளங்கள் ஆகியவை கிரிக்கெட்டை பேட்ஸ்மேன்களின் கைகளுக்கு ஒட்டுமொத்தமாக மாற்றிவிட்டன. தற்போதைய டி20 போட்டிகள் பவுண்டரி மற்றும் சிக்சர்களை அடிக்கும் ஒரு இயந்திரத்தனமான விளையாட்டாக மாறிவிட்டது. சவால்கள் இல்லாத விளையாட்டில் சுவாரஸ்யம் இருக்காது. கேப்டன், பவுலர் மற்றும் பேட்ஸ்மேன்களுக்கு இடையிலான திட்டமிடல் தற்போது காணாமல் போய்விட்டது. விக்கெட்டுகளுக்கு இடையே ஓடி ரன் எடுக்கும் வழக்கமே அழிந்துவிட்டது” என அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.