ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்தை வீழ்த்திய பாகிஸ்தான் அணி, முதன்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இந்தியா, இலங்கை, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. இதில், இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதேநேரத்தில், இந்தப் பிரிவில் 2 போட்டிகளில் இலங்கை அணி தோல்வியுற்றதைத் தொடர்ந்து அது தொடரிலிருந்து வெளியேறியது. இதையடுத்து இறுதிப்போட்டிக்குள் நுழையப் போகும் அடுத்த அணி எது என பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்குள் போட்டி நிலவியது.
இதை நிரூபிக்கும் விதமாக நேற்று இவ்விரு அணிகளுக்குள் பலப்பரீட்சை நடந்தது. அதன்படி முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. பின்னர் 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி, எவ்வளவுதான் போராடியும் இறுதியில் தோல்வியையே சந்தித்தது. அவ்வணியில் ஷமீம் ஹொசைன் 30 ரன்கள் எடுத்தபோதும், இறுதியில் அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து, பாகிஸ்தான் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முதன்முறையாக முன்னேறியுள்ளது.