துனித் வெல்லாலாகே
துனித் வெல்லாலாகே ட்விட்டர்
கிரிக்கெட்

5 விக்கெட்கள் வீழ்த்தி இந்திய அணியைச் சுருட்டிய இலங்கையின் இளம்வீரர்.. யார் இந்த துனித் வெல்லாலாகே?

Prakash J

ஆசியக் கோப்பை 2023

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகள் மோதி வருகின்றன. இந்தச் சுற்றில் முதல் 2 இடங்கள் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடும்.

இந்த நிலையில், மழையால் ஒத்திவைக்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் நேற்று இலங்கை பிரேமதேசா மைதானத்தில் தொடர்ந்து நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் குவித்தது. கே.எல்.ராகுல், கிங் கோலி ஆகியோர் சதமடித்து சரித்திர சாதனை படைத்தனர். பின்னர் ஆடிய பாகிஸ்தான், 32 ஓவர்களில் 128 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதையடுத்து இந்திய அணி, 228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

kl rahul, virat

பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்த இந்தியா

இதே உற்சாகத்தில் தொடர்ந்து ஓய்வில்லாமல் விளையாடும் இந்திய அணி, இன்று அதே மைதானத்தில் இலங்கையை எதிர்கொண்டது. இன்றைய போட்டியில் டாஸ் ஜெயித்த இந்தியா, முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. அதன்படி தொடக்க பேட்டர்களான கேப்டன் ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் அதிரடி காட்டாமல் பொறுமையுடன் விளையாடினர். எனினும், சுப்மன் கில் 19 ரன்கள் எடுத்திருந்த நிலையில் துனித் வெல்லாலாகே பந்துவீச்சில் போல்டானார்.

முன்னணி வீரர்களை வெளியேற்றிய வெல்லாலாகே!

அவரைத் தொடர்ந்து நேற்றைய போட்டியில் சதமடித்த விராட் கோலியும் இன்று 3 ரன்கள் எடுத்த நிலையில், அவரது பந்துவீச்சில் ஷனகாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தொடர்ந்து ரோகித் ஷர்மாவும் அரைசதம் (53 ரன்கள்) அடித்த நிலையில், அதே துனித் வெல்லாலாகே பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். அவருக்குப் பின் நேற்று சதமடித்த கே.எல்.ராகுலையும் அவரே கேட்ச் பிடித்து 39 ரன்களில் வெளியேற்றினார். அதுபோல் ஹர்திக் பாண்டியாவையும் 5 ரன்களில் வெளியேற்றினார்.

rohit, gill

இந்திய அணியின் நட்சத்திர பட்டாளமான ரோகித், கோலி, ராகுல், பாண்டியா, சுப்மன் என 5 பேரையும் தன்னுடைய மாயவலை பந்துவீச்சால் வீழ்த்தி சாதனை படைத்தார். அவர், 10 ஓவர்கள் வீசி 1 மெய்டனுடன் 40 ரன்களை வழங்கி, 5 விக்கெட்களை வீழ்த்தினார். அவருக்குத் துணையாக பந்துவீசிய அசலங்காவும் 4 விக்கெட்களை வீழ்த்தினார். இதனால், இந்திய அணி சீட்டுக்கட்டுப்போல் சரிந்ததுடன், வீரர்களும் சொற்ப ரன்களில் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினர். இதனால் இந்திய அணி, 47 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழையால் குறுக்கிட்டதால், போட்டி தற்காலிமாக நிறுத்தப்பட்டது.

யார் இந்த துனித் வெல்லாலாகே?

இன்றைய போட்டியில், இந்திய அணியின் பேட்டிங்கைச் சீர்குலைத்தவர் இலங்கை சுழற்பந்து வீச்சாளரான, துனித் வெல்லாலாகே. இவருடைய சாதுர்யமான பந்துவீச்சில், இந்திய அணியின் முன்னணி வீரர்களே நிலைகுலைந்தனர். இதனால் இந்திய அணி 200 ரன்களைக்கூடக் கடக்க முடியாமல் தடுமாறி வருகிறது. இன்றைய போட்டியில் துனித் வெல்லாலாகே, 5 விக்கெட்கள் மூலம் இணையதளங்களிலும் வைரலானார். இவர், கடந்த ஆண்டு நடைபெற்ற U19 உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணியை தலைமையேற்று நடத்தியவர்.

துனித் வெல்லாலாகே

அவ்வணியின் கேப்டனாக இருந்தபோது வெல்லாலாகே, உலகளவில் கவனம் ஈர்த்தார். தவிர, அந்தத் தொடரில் ஆல்ரவுண்டராகவும் ஜொலித்தார். அவர், அந்தத் தொடரில் ஆறு போட்டிகளில் 13.58 சராசரியுடன் 17 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும், 6 போட்டிகளில் 44 சராசரியுடன் 264 ரன்கள் எடுத்து, இலங்கையின் அதிகபட்ச ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்தார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான துனித் வெல்லாலாகே, அதே போட்டியில் 2 விக்கெட்களை எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.