ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் ஓமனையும் வீழ்த்தி வெற்றி பெற்றது.
17வது ஆசிய கோப்பை தொடரானது யுஏஇ-ல் உள்ள துபாய் மற்றும் அபுதாபி மைதானங்களில் நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன், ஹாங்காங் முதலிய 8 அணிகள் இரண்டு குழுக்களாக லீக் போட்டிகளில் விளையாடிய நிலையில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் முதலிய 4 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன. இதில் ஓர் அணி மற்ற 3 அணிகளுடன் தலா ஒருமுறை மோதும் நிலையில், முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும்.
இந்நிலையில் சூப்பர் 4 போட்டிகளுக்கு முன்னதாக இந்தியா நேற்று தன்னுடைய கடைசி லீக் போட்டியில் ஓமனை எதிர்கொண்டது. இதையடுத்து முதலில் பேட் செய்த இந்திய அணி, அபிஷேக் சர்மா (38 ரன்கள்), சஞ்சு சாம்சன் (56 ரன்கள்) அக்சர் பட்டேல் (26 ரன்கள்) திலக் வர்மா (29 ரன்கள்) ஆகியோரது ரன் குவிப்பால், இந்திய அணி 20 ஓவர்களில் 188 ரன்கள் எடுத்தது. பின்னர், கடினமான இலக்குடன் களமிறங்கிய ஓமன் அணியில் தொடக்க வீரர்கள் சிறப்பான பங்களிப்பை அளித்தனர். கேப்டன் ஜேட்டிந்தர் சிங் 32 ரன்கள், ஆமீர் கலீம் 64 ரன்கள், ஹமாத் மிஸ்ரா 51 ரன்கள் எடுத்து நல்ல அடித்தளத்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தபோதும், பின்னர் வந்த வீரர்களால் அந்த அணியை வெற்றிப் பாதைக்கு இழுத்துச் செல்ல முடியவில்லை. இறுதியில் அந்த அணி 20 ஓவர்களில், 4 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து இந்திய அணி, 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. லீக் சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், இன்றுமுதல் சூப்பர் 4 சுற்றுப் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. அதன்படி இன்றைய முதல் ஆட்டத்தில் இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் மோத உள்ளன.