pakistan team twitter
கிரிக்கெட்

ஆசியக் கோப்பை: 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.. முதல் போட்டியில் நேபாளத்தை பந்தாடியது பாகிஸ்தான்!

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

Prakash J

6 அணிகள் பங்கு பெற்றுள்ள 16வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று (ஆகஸ்ட் 30) பாகிஸ்தானில் தொடங்கியது. இந்த தொடரின் முதல் போட்டியில் இன்று, ’ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ள பாகிஸ்தானும் நேபாளமும் களம் கண்டன. இந்தப் போட்டியில் டாஸ் ஜெயித்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். அதன்படி, அந்த அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 342 ரன்கள் குவித்தது. அவ்வணியில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 131 பந்துகளில் 14 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர் உதவியுடன் 151 ரன்கள் எடுத்தார். அவருக்குத் துணையாக நின்ற இப்திகார் அகமதுவும் 71 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உதவியுடன் 109 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் கேப்டன் பாபர் அசாம் 151 ரன்கள் எடுத்ததன் மூலம் ஒருசில சாதனைகளையும் படைத்தார்.

pakistan team

பின்னர் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய நேபாளம் அணி, 104 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. 23.4 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த அந்த அணி முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அவ்வணியில் அதிகபட்சமாக ஆரிஃப் சேயிக் 26 ரன்களும், சோம்பால் காமி 28 ரன்களும் எடுத்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் சதாப் கான் 4 விக்கெட்களை வீழ்த்தினார். சகீன் அப்ரிடி மற்றும் ஹரீஸ் ராப் ஆகியோர் தலா 2 விக்கெட்களை எடுத்தனர்.