dube - rinku - hardik cricinfo
கிரிக்கெட்

10 ஆண்டில் இந்தியா இப்படி ஆடியதில்லை.. ஹர்திக், துபே, ரிங்குவை பாராட்டித் தள்ளிய அஸ்வின்!

கடந்த 10 ஆண்டுகளில் கடினமான ஆடுகளத்தில் டாப் ஆர்டர்கள் அனைவரும் அவுட்டானபிறகு, இந்தியா இப்படியான ஒரு ஆட்டத்தை ஆடியதில்லை என்று அஸ்வின் புகழ்ந்துள்ளார்.

Rishan Vengai

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர்கள் சஞ்சு சாம்சன் 1, திலக் வர்மா 0 மற்றும் சூர்யகுமார் யாதவ் 0 என சொற்ப ரன்களில் வெளியேறினர். 12 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்தபிறகு ஹர்திக் பாண்டியா மற்றும் ஷிவம் துபேவின் அதிரடியான அரைசதத்தால் இந்திய அணி 20 ஓவரில் 181 ரன்களை குவித்தது.

dube

இரண்டு ஆல்ரவுண்டர்களின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி ஒரு அற்புதமான வெற்றியை பதிவுசெய்தது. ஆட்டநாயகனாக ஷிவம் துபே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் இந்தியாவின் தரமான கம்பேக் ஆட்டத்திற்கு பிறகு இந்தியாவின் பேட்டிங்கை முன்னாள் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டி பேசியுள்ளார்.

10 ஆண்டில் இந்தியா இப்படி ஆடியதில்லை..

இந்தியாவின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், இங்கிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டியில் சிறப்பாக விளையாடியதற்காக இந்திய வீரர்கள் ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங் மூன்று பேரையும் பாராட்டினார்.’

இதுகுறித்து அவருடைய யூடியூப் சேனலில் பேசியிருக்கும் அஸ்வின், “இந்திய அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் விரைவாக வெளியேறிய பிறகு, இப்படியான கடினமான ஆடுகளத்தில் 181 ரன்கள் அடித்ததே இல்லை. கடந்த 10 ஆண்டுகளில் இதுபோல நடந்த போதெல்லாம் இந்தியா அதிகபட்சமாக 150 ரன்கள் பக்கமே அடித்துள்ளது. அதற்காக மிடில் ஆர்டர் வீரர்களான ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரிங்கு சிங் மூன்றுபேரையும் பாராட்ட வேண்டும்.

hardik

ஹர்திக் பாண்டியா அடில் ரசீத்துக்கு எதிராக டாட் பந்துகளை வைத்ததற்கு விமர்சனங்கள் எழுந்ததாக கேள்விபட்டேன். ஒரு வீரர் 5வது மற்றும் 6வது இடத்தில் வந்து தொடர்ந்து சிறப்பாக விளையாடுகிறார் என்றால் அவருடைய ரோலில் அவர் தெளிவாக இருக்கிறார். ஒரு ஸ்பின்னர் போட்டியில் சிறப்பாக வீசுகிறார் என்றால், அவருக்கான மரியாதையை அளிக்க வேண்டும். அதைத்தான் ஹர்திக் செய்தார், ஒரு அபாரமான ஆட்டத்தை ஹர்திக் வெளிப்படுத்தினார்.

hardik - dube

இந்திய அணி நீண்டகாலமாக சிக்ஸ் ஹிட்டர்கள் இல்லாமல் தேடிவந்தது. நம்பர் 1 டி20 பவுலராக ஃபார்மில் இருக்கும் அடில் ரசீத்துக்கு எதிராக ஷிவம் துபே கிளீன் ஹிட் அடித்ததை பார்க்கும்போது அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.

அதேபோல ரிங்கு சிங், எங்கு அடிக்க வேண்டும், எப்போது தள்ளி ஆடவேண்டும், ஆட்டத்தை எப்படி எடுத்துவர வேண்டும் என தெளிவாக காண்பித்தார். சஞ்சு சாம்சன் அவுட்டானதை போலான ஒரு டெலிவரியில் தூக்கி சிக்சருக்கு அடித்த அவருடைய கம்போஷர் அற்புதமாக இருந்தது. இந்திய மிடில் ஆர்டர் வீரர்கள் இப்படி சிறப்பாக செயல்படுவது இந்திய அணிக்கு பெரியவிசயம்” என்று பாராட்டியுள்ளார்.