அபிமன்யு ஈஸ்வரனுக்கு ஆதரவாக அகர்கர் தேர்வுக்குழுவை கலாய்த்த அஸ்வின் web
கிரிக்கெட்

ஈஸ்வரனுக்காக தேர்வுக்குழுவை கலாய்த்த அஸ்வின்.. என்ன சொன்னார் பாருங்கள்..?

அபிமன்யு ஈஸ்வரனுக்கான டெஸ்ட் தேர்வு குறித்து அஜித் அகர்கரின் தேர்வுக்குழுவை விமர்சித்து பேசியுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்..

Rishan Vengai

இந்திய டெஸ்ட் அணியில் வீரர் தேர்வு குறித்து விமர்சனங்கள் அதிகரித்துள்ள நிலையில், அபிமன்யு ஈஸ்வரன் சையத் முஷ்டாக் அலி டிரோபியில் 66 பந்தில் 130 ரன்கள் குவித்து அனைவரையும் கவர்ந்தார். இதை பாராட்டிய அஸ்வின், டெஸ்ட் அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் எனக் கூறி, அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழுவை மறைமுகமாக கலாய்த்தார்.

தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தலைமையில் கடந்த 12 மாதங்களில் இரண்டு முறை சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்துள்ளது இந்திய அணி.. மோசமான பின்னடைவை சந்தித்திருக்கும் இந்திய டெஸ்ட் அணியில் வீரர்கள் தேர்வு என்பது தொடர்ந்து விவாதப்பொருளாகவே இருந்துவருகிறது..

கேஎல் ராகுல்

இந்திய அணியில் நிலையான நம்பர் 3 டெஸ்ட் பேட்ஸ்மேன் இல்லாததும், டெஸ்ட் ஸ்பெசலிஸ்ட் வீரர்களை தேர்வுசெய்யாமல் ஆல்ரவுண்டர்களை அதிகமாக விளையாட வைப்பதும், முதல்தர கிரிக்கெட்டை விடுத்து ஐபிஎல்லை டெஸ்ட் அணிக்கான தேர்வாக பார்ப்பதும் என கம்பீர் மற்றும் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன..

gambhir - agarkar

இதில் முக்கியமாக முதல்தர கிரிக்கெட்டில் 8000 ரன்களுக்கு மேல் அடித்திருக்கும் அபிமன்யு ஈஸ்வரனுக்கும், 70 சராசரி வைத்திருக்கும் சர்பராஸ் கானுக்கும் வாய்ப்பு கிடைக்காதது முன்னாள் வீரர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது..

அகர்கர் தேர்வுக்குழுவை விமர்சித்த அஸ்வின்..

தற்போது நடைபெற்றுவரும் சையத் முஷ்டாக் அலி டிரோபியில் பெங்கால் அணிக்காக விளையாடிவரும் அபிமன்யு ஈஸ்வரன், நேற்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான டி20 போட்டியில் 66 பந்தில் 130 ரன்கள் குவித்து மிரட்டினார். அதில் 12 பவுண்டரிகளையும் 8 சிக்சர்களையும் விளாசினார் அபிமன்யு..

இந்தசூழலில் 200 ஸ்டிரைக்ரேட்டில் அபிமன்யு ஈஸ்வரனின் அற்புதமான ஆட்டத்தை பாரட்டிய ரவிச்சந்திரன் அஸ்வின், அவருடைய யூடியூப் சேனலில் அபிமன்யுவை பாராட்டி பேசியுள்ளார்..

அப்போது பேசிய அவர், ”அணித்தேர்வு குறித்து எப்போதும் பேசப்படும் வீரர்களில் ஒருவரான அபிமன்யு ஈஸ்வரன் குறித்து நான் தற்போது மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இப்போது அவர் டி20 கிரிக்கெட்டில் சதமடித்துள்ளார்.. இனிமேல் அவரை நாம் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியில் பார்க்கலாம்” என அகர்கரின் தேர்வுக்குழுவை விமர்சித்துள்ளார்.. இந்திய டெஸ்ட் அணிக்கான வீரர்களை கம்பீர் மற்றும் அகர்கர் குழு ஐபிஎல் மற்றும் டி20 வடிவத்திலிருந்து தேர்வுசெய்வதாக தொடர்ந்து விமர்சனம் வைக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது..