Rajdeep Sardesai - Ravichandran Ashwin
Rajdeep Sardesai - Ravichandran Ashwin Twitter
கிரிக்கெட்

ஜானி பேர்ஸ்டோ சர்ச்சை அவுட்: ட்விட்டரில் அஸ்வின் - பத்திரிகையாளர் மோதல்!

Justindurai S

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது போட்டியில் சில சர்ச்சையான நிகழ்வுகள் நடைபெற்றன. அதில் மிகவும் குறிப்பிடத்தக்க விதமாகவும் பலரின் பேசுபொருளாகவும் மாறியது ஜானி பேர்ஸ்டோவ் ரன் அவுட்.

Bairstow Run Out

இரண்டாவது டெஸ்ட்டின் 5ஆம் நாளில் ஜானி பெயர்ஸ்டோ ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். அதாவது பந்தை விட்டதும் கிரீஸை தனது காலால் மிதித்துவிட்டு முன்னோக்கி நடக்கத் தொடங்கி விடுவார். நடுவர்களோ யாருமே ஓவர் முடிந்து விட்டதற்கான சிக்னலை கொடுக்கும் முன்னமே வேகமாக கிரிஸை விட்டு நகர்ந்து விடுவார். இதைக்கண்ட கீப்பர் அலெக்ஸ் கேரி, பந்தை தான் பிடித்ததும் தாமதிக்காமல் ஸ்டம்பினை நோக்கி அடித்து விடுவார். அவர் அடிக்கும் சமயத்தில் பெயர்ஸ்டோ வெளியே இருப்பார். அதனால் மூன்றாம் நடுவர் விக்கெட் என தீர்ப்பு வழங்கினார்.

ஆட்டத்தின் திருப்புமுனையாக இருந்த இந்த விக்கெட்டினை இங்கிலாந்து ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் விவாதப் பொருளானது. இறுதியில் ஆஸ்திரேலியா அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கீப்பர் அலெக்ஸ் கேரி செய்தது முறையற்றது என்றும் ஆஸ்திரேலியா அணியினர் வெற்றி பெறுவதற்காக குறுக்கு வழியை கையாண்டு விட்டார்கள் என்கிற குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன. மற்றொருபுறம் இது கிரிக்கெட் விதிமுறைகளுக்கு உட்பட்டே நடைபெற்றிருக்கிறது என்று கருத்துக்கள் பேசப்பட்டு வருகின்றன.

Ravichandran Ashwin

இதற்குமுன்பு, பவுலர் பந்தினை போடும்முன் பேட்டர் கிரீஸை விட்டு வெளியேறினால் பவுலர் ஸ்டம்பினை அடித்து அவுட் ஆக்கும் 'மன்கட்' முறை மிகப்பெரிய விவாதத்தினை ஏற்படுத்தியது. தற்போது கீப்பர் அலெக்ஸ் கேரி செய்த வினோதமான ரன் அவுட் பெரும் விவாதப்பொருளாகி இருக்கிறது. இதனிடையே 'மன்கட்' அவுட் முறைக்கு ஆதரவாக தொடர்ந்து பேசிவரும் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், ஆஸ்திரேலிய வீரர் பெயர்ஸ்டோ விக்கெட்டிற்கு என்ன கூறப் போகிறாரோ என கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வந்த நிலையில், தன்னுடைய யூடியூப் சேனலில் இதுகுறித்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டார் அவர்.

அதில் அவர், “ஓவரின் கடைசி பந்து என்பதால் பந்தை விட்டுவிட்ட பிறகு நேரடியாக நான்-ஸ்ட்ரைக்கர் முனைக்கு வந்துவிட பார்த்தார் ஜானி பேர்ஸ்டோவ். ஆனால் கீப்பர் பந்தை பிடித்தாரா இல்லையா என்பதை உறுதி செய்யாமல் நடந்து வந்துவிட்டார். அலெக்ஸ் கேரி பந்தைப் பிடித்து ஒரு நொடியும் தாமதிக்காமல் ஸ்டெம்பிங் செய்துவிட்டார்.

அனைத்தும் விதிமுறைகளுக்கு உட்பட்டே இது நடந்திருக்கிறது. நாம் நிச்சயமாக இந்த விஷயத்தில் தனிப்பட்ட ஒருவரின் ஆட்ட நுணுக்கத்தினை பாராட்ட வேண்டுமே தவிர தவறாக விளையாடி விட்டார் அல்லது ஸ்பிரிட் ஆஃப் தி கேமை அழித்து விட்டார் என்றெல்லாம் கூறக்கூடாது'' என்று அழுத்தந்திருத்தமாக கூறினார் அஸ்வின்.

Cricketer Ashwin

அஸ்வினின் இந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் வழக்கம்போல் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அஸ்வினின் கருத்துடன் உடன்படாத மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் ட்விட்டரில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். அதில் அவர், “இதைப் பற்றி சொல்ல முன்வந்ததற்கு மன்னிக்கவும். நான் விளையாட்டை விரும்புபவன் என்பதால் இதை கூறுகிறேன். ஜானி பேர்ஸ்டோவின் அவுட் முடிவு சரிதான் எனக்கூறும் எனது நண்பர் அஷ்வினிடமும், மற்றவர்களிடமும் கேட்பதற்கு என்னிடம் ஒரு எளிய கேள்வி உள்ளது.

அந்த இடத்தில் உங்களை அவ்வாறு அவுட் செய்திருந்தால் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்களா? மற்றவர்கள் உங்களுக்கு எதைச் செய்ய வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அதையே மற்றவர்களுக்கு நீங்கள் செய்யுங்கள்'' என்று பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து பத்திரிகையாளர் ராஜ்தீப்பின் ட்வீட்டிற்கு பதிலளித்த அஸ்வின், "நான் ஏமாற்றமடைவேன், மிகவும் ஏமாற்றமடைவேன். உண்மையில் அப்படி அவுட் ஆகி வெளியேறியானால் நொந்து போவேன்'' என்றார்.

அஸ்வினின் இந்த பதிலால் பத்திரிகையாளரும், விமர்சித்தவர்களும் வாயடைத்துப் போயினர். அஸ்வினுக்கு ஆதரவாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.