அஸ்வினின் நூற்றாண்டின் சிறந்த டி20 பந்து web
கிரிக்கெட்

T20 Ball of The Century| உலகத்தையே ‘Whoa’ சொல்லவைத்த அஸ்வின்! மறக்க முடியுமா?

இந்தியாவின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய 39வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இந்த பிறந்தநாளில் அஸ்வின் வீசிய ’T20 Ball of The Century’ பந்தை பற்றி பார்க்கலாம்..

Rishan Vengai

2009-ம் ஆண்டு ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அறிமுகம் பெற்ற சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், 2010-ம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச அறிமுகத்தை பெற்றார்.

ashwin csk

தன்னுடைய அபாரமான பந்துவீச்சு திறமையால் இந்தியாவின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக தடம்பதித்த அஸ்வின், மூன்று வடிவத்திலும் 765 விக்கெட்டுகள், இந்திய மண்ணில் அதிக (475) விக்கெட்டுகள், அதிக (11) தொடர்நாயகன் விருதுகள் வென்ற உலக வீரர், அதிகமுறை 5 விக்கெட்டுகள் (37) வீழ்த்திய இந்திய வீரர், அதிகமுறை (200-க்கும் மேற்பட்ட) இடதுகை வீரர்களின் விக்கெட்டை வீழ்த்தியவர், சதம் + 5 விக்கெட்டுகள் அதிகமுறை (4) நிகழ்த்தியவர், அதிவேகமாக 250, 300, 350 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய உலக பவுலர் போன்ற பல வரலாற்று சாதனைகளை தன்வசம் வைத்துள்ளார்.

அஸ்வின்

இந்தியாவிற்காக ரவிச்சந்திரன் அஸ்வின் ஆற்றிய சிறந்த பங்களிப்பை அங்கீகரித்த இந்திய அரசு சமீபத்தில் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.

இந்திய ஜாம்பவான் கிரிக்கெட் வீரராக வரலாற்றில் தடம்பதித்துள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் இன்று தன்னுடைய 39வது வயதில் காலடிவைக்கிறார். இந்த தருணத்தில் அஸ்வின் வீசிய தலைசிறந்த பந்து பற்றி இங்கே பார்க்கலாம்..

T20 Ball of The Century..

ரவிச்சந்திரன் அஸ்வின் எப்போதும் வெறும் பந்து வீச்சாளராக மட்டும் இருந்ததில்லை, அவர் களத்தில் ஒரு சிந்தனையாளராகவே செயல்படக்கூடியவர். பேட்ஸ்மேன்களை எப்படி வீழ்த்தலாம் என்ற தந்திரத்தோடு, ஒரு கிரிக்கெட் விஞ்ஞானியை போல யோசிக்கக்கூடியவர். அதனால் தான் வீரேந்தர் சேவாக் அவரை விஞ்ஞானி என்றும், சட்டீஸ்வர் புஜாரா 24 மணி நேரமும் அவரால் கிரிக்கெட்டை பற்றி பேச முடியும் என்றும், சிறந்த புத்திசாலி என்றும் புகழாரம் சூட்டினர்.

தன்னுடைய ப்ரைம் ஃபார்மில் பேட்ஸ்மேன்களின் நம்பிக்கையை உடைப்பதையே வேலையாக கொண்டிருந்த அஸ்வின், ஒருநாள் ’T20 Ball of The Century’ மூலம் உலகையே "ஐயோ!" என்று சொல்ல வைத்தார். அப்படி அவர்வீசிய நூற்றாண்டின் சிறந்தபந்தை அவரது பிறந்தநாளில் மீண்டும் நினைவுபடுத்தாமல் இருக்க முடியாது.

அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் பல சிறந்த பந்துகளை அஸ்வின் வீசினாலும், 2014 டி20 உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்காவின் ஜாம்பவான் வீரர் ஹசிம் ஆம்லாவிற்கு எதிராக அஸ்வின் போட்ட லெக் ஸ்பின் ‘T20 Ball of The Century’ என ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. முதலில் ’T20 Ball of The Century’ என்று அஸ்வினுக்கு புகழாரம் சூட்டியவர் ஆஸ்திரேலியா ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் தான்.

டாக்காவில் நடந்த 2014 ஐசிசி டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி அது. தென்னாப்பிரிக்கா பேட்டிங் செய்யத் தேர்வுசெய்தது, புவனேஷ்வர் குமாரிடம் குயின்டன் டி காக்கை ஆரம்பத்தில் இழந்த பிறகு, ஹசிம் ஆம்லா மற்றும் ஃபாஃப் டு பிளெசிஸ் மூலம் அவர்கள் மீண்டும் ஆட்டத்தில் கம்பேக் கொடுத்தனர். அப்போது எம்.எஸ். தோனிக்கு ஒரு திருப்புமுனை தேவைப்பட்டது. பவர்பிளேயின் இறுதி ஓவருக்காக அஸ்வின் பந்துவீச ஆயத்தமானபோது தான், உலக கிரிக்கெட் ரசிகர்கள் ’T20 Ball of The Century’ என்பதை கண்ணால் கண்டனர்.

வலுதுகை பேட்ஸ்மேனான ஆம்லாவுக்கு எதிராக அஸ்வின் அரவுண்ட் தி விக்கெட்டை தேர்ந்தெடுத்தார். ஆரம்பத்தில் அது விசித்திரமாகத் தோன்றினாலும், அவரது பிரமாண்டமான திட்டத்தின் ஒரு பகுதியாக அது இருந்தது. பந்தை தூக்கி லெக் ஸ்டெம்புக்கு வெளியே அஸ்வின் வீச, அது என்ன திரும்பிவிட போகிறது என லெக் சைடில் ஒரு ஃபிளிக் அடிக்க பேட்டை விட்டார் ஆம்லா. ஆனால் பந்து எதிர்பாராத விதமாக நன்றாக திரும்பி, லெக் ஸ்டெம்பில் பிட்ச்செய்து ஆஃப் ஸ்டம்பை தாக்கி ஆம்லாவை போல்டாக்கியது. இதை நம்பமுடியாத ஆம்லா அதிர்ச்சியில் உறைந்து போனார்.

ரசிகர்கள் அந்த விக்கேட்டை 'Whoa' என கொண்டாடித்தீர்த்தனர், ஆடம் கில்கிறிஸ்ட் அதை ’T20 Ball of The Century’ என்று புகழாரம் சூட்ட பெரும்பாலான ரசிகர்கள் அதை பிரகடனம் செய்தனர். ஒரு தலைசிறந்த பவுலரிடமிருந்து ஒரு நூற்றாண்டின் டி20 பந்தை உலகம் தரிசனம் செய்தது. ஹேப்பி பர்த்டே ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின்!