ரிஷப் பண்ட் - ஜெய்ஸ்வால் web
கிரிக்கெட்

இந்திய வீரர்களிடம் ஸ்பின்னுக்கு எதிரான திறமை இருக்கிறதா..? அஸ்வினை தொடர்ந்து கவாஸ்கர் விமர்சனம்!

சுழற்பந்துவீச்சுக்கு எதிராக சிறப்பாக விளையாடும் திறமை இந்திய வீரர்களுக்கு கடந்த பல வருடங்களாக இல்லை என அஸ்வின் விமர்சித்துள்ளார்..

Rishan Vengai

இந்திய வீரர்கள் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக திறமையற்றவர்களாக இருப்பதாக அஸ்வின் மற்றும் கவாஸ்கர் விமர்சித்துள்ளனர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா சொந்த மண்ணில் தோல்வியடைந்ததை அடுத்து, அஸ்வின் இந்திய வீரர்கள் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக சிறப்பாக விளையாட முடியவில்லை என கூறினார். இதை தொடர்ந்து, கவாஸ்கர் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடாததை விமர்சித்தார்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் தென்னாப்பிரிக்கா அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது..

2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி வரலாறு படைத்தது தென்னாப்பிரிக்கா..

இந்தியா - தென்னாப்பிரிக்கா

வெறும் 124 ரன்களை சேஸ் செய்யமுடியாமல் 30 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை இந்தியா சந்தித்த நிலையில், சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சுழற்பந்துவீச்சாளர் சைமன் ஹார்மர் 8 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்..

டெம்பா பவுமா

இந்தசூழலில் இந்திய வீரர்கள் ஸ்பின்னுக்கு எதிராக தொடர்ந்து சொதப்புவது குறித்து அஸ்வின் அதிருப்தி தெரிவித்திருந்தார்.. அவரைத் தொடர்ந்து முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட்டர் சுனில் கவாஸ்கரும் இந்திய வீரர்களை விமர்சித்துள்ளார்..

அஸ்வின், கவாஸ்கர் விமர்சனம்..

தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 15 ஆண்டுகளுக்கு பிறகு சொந்தமண்ணில் இந்தியா தோற்றதை அடுத்து, ஸ்பின்னுக்கு எதிரான இந்திய வீரர்களின் திறமையை அஸ்வின் கேள்வி எழுப்பினார்.. இந்தியா தங்களுக்கு சாதகமான பிட்ச்சை தயாரிக்க முயன்றதால் ஆடுகளம் உடைந்ததாக குற்றஞ்சாட்டிய அவர், ஸ்பின்னுக்கு எதிராக இந்திய வீரர்களிடம் திறமை இல்லை என்பதையும் பகிரங்கமாக தெரிவித்தார்..

அப்போது பேசிய அவர், ”தற்போதைய சூழலில் இந்திய வீரர்கள் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக சிறப்பானவர்கள் அல்ல.. அவர்கள் வேகப்பந்துவீச்சுக்கு எதிராக சிறப்பாக விளையாடக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.. அதைத்தான் முக்கியமானதாகவும், சவால் மிகுந்ததாகவும் கருதுகிறார்கள்.. நம்மைவிட பல மேற்கத்திய நாடுகளை சேர்ந்த வீரர்கள் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக சிறப்பாக விளையாடுகிறார்கள், சிறப்பான ஸ்பின் பந்துவீச்சையும் வெளிப்படுத்துகிறார்கள்.. இதுதான் தற்போதைய இந்திய அணிக்கும் மற்ற அணிகளுக்கும் வித்தியாசமாக இருக்கிறது” என்று பேசியுள்ளார்.

சுனில் கவாஸ்கர்

இந்நிலையில் அஸ்வின் விமர்சித்ததை தொடர்ந்து முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கரும் வீரர்களை விமர்சித்துள்ளார்.. இதுகுறித்து பேசியிருக்கும் அவர், “இந்திய வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதை விரும்பவில்லை.. ஒரு வீரர் தன்னுடைய தேசத்திற்காக எப்போதும் விளையாட தயாராக இருக்கவேண்டும்.. ஆனால் இவர்கள் பணிச்சுமை என்ற ஒரு வார்த்தையை பிடித்துக்கொண்டு உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதை தவிர்க்கின்றனர்.. ஃபார்ம் அவுட்டானால் மட்டுமே உள்நாட்டு போட்டிகளில் விளையாட நினைக்கிறார்கள், இல்லையா எதற்காக நாம் விளையாட வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருக்கிறது” என்று விமர்சித்துள்ளார்..